2009-09-23 16:24:24

ஹைதராபாதில் காலமான பெல்ஜிய நாட்டு அருட்தந்தை விண்டி உடல் அடக்கம் 


இந்திய கிராம மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அம்மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 42 ஆண்டுகள் அயராது உழைத்த பெல்ஜிய நாட்டு அருட்தந்தை மைக்கில் அன்டனி  விண்டி, (Michael Antony Windey) அண்மையில் ஹைதராபாதில் காலமானதை அடுத்து, செப். 26 பெல்ஜியத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

 1921 ஆம் ஆண்டு பிறந்த அருட்தந்தை, 1946 ஆம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்து, இங்கு 1950 ஆம் அண்டு குருப்பட்டம் பெற்றதும் தன் சமூகப் பணியை ராஞ்சியில் துவங்கினார். 1969 ஆம் ஆண்டு ஆந்திராவின் நாகயலங்கா என்ற இடத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு, வெள்ளம் இவற்றால் ஆயிரமாயிரமாய் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கண்டு அருட்தந்தை விண்டி அவர்கள் மத்தியில் தன் தீவிரப் பணியை ஆரம்பித்தார். காந்தியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு "கிராமத்தைக் கட்டியெழுப்பும் அமைப்பு" (Village Reconstruction Organisation - VRO) என்ற குழுக்களை உருவாக்கி பணி செய்தவர், அருட்தந்தை விண்டி.

"தந்தையவர்கள் பெல்ஜியத்தில் பிறந்தவர் ஆயினும், வாழ்க்கையில் ஒரு முழு இந்தியனாக வாழ்ந்தவர்" என்று ஆந்திரத் திருச்சபைகள் கிறிஸ்தவ ஒன்றியக் குழுவின் செயலர் அருட்தந்தை அந்தோணிராஜ் தும்மா கூறினார்.

அருட்தந்தை விண்டியின் பணியில் உதவி செய்த அருட்தந்தை பீட்டர் டானியேல், "தந்தையவர்களின் மறைவு சமூகப் பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நினைவாக குன்டூரில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" என்றார்.







All the contents on this site are copyrighted ©.