2009-09-23 16:25:00

மாபெரும் நதிகளின் டெல்டாப் பகுதிகள் தாழ்ந்து கொண்டே வருவதால் ஏற்படும் ஆபத்து - புவியியல் ஆய்வாளர்கள் கூற்று 


உலகின் பல்வேறு மாபெரும் நதிகளின் டெல்டாப் பகுதிகள் தாழ்ந்து கொண்டே வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து அதிகமாகின்றது என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகின் மாபெரும் நதிகளான கொலராடோ, நைல், ரோன், யாங்க்ட்ஸே ஆகிய நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகளால் இந்த நதிகளின் டெல்டாப் பகுதிகளுக்குச் சென்று சேர வேண்டிய மணல், மண் இவை குறைகின்றன. அதே நேரத்தில் இந்த நதிகளிலிருந்து தேவைக்கும் அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால், இந்த ஆபத்து அதிகமாகிறது என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்த நிலையால், அண்மை ஆண்டுகளில் பெரும் நதிகளின் டெல்டா பகுதிகளில் 85 விழுக்காடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதிகளில் வாழும் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று இயற்கை-புவியியல் குறித்த ஆய்வு வெளியீடு ஒன்று குறிப்பிட்டுள்ளது. உலகின் 33 நதிகளின் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 24 டெல்டா பகுதிகள் தாழ்ந்து, கரைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் டெல்டா பகுதிகளில் பெரும்பாலானவை ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் காணக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. ஆபத்து அதிகம் உள்ளதென அடையாளம் காணப்பட்ட டெல்டா பகுதிகளில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி டெல்டா பகுதியும் ஒன்றாகும்.







All the contents on this site are copyrighted ©.