2009-09-23 16:09:35

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


செப். 23. சில நாட்கள் மழை, சில நாட்கள் தூறல், இன்னும் சில நாட்கள் மிதமான வெயில் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும் ரோம் நகர காலநிலையானது, இப்புதனன்று மிதமான வெயில் என்று தன்னைப் பதிவு செய்துக் கொண்டது. மழைத் தூறலின்றி ரோம் நகரம் சூரிய வெளிச்சத்தில் நனைந்துக் கொண்டிருக்க, திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொது மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை.

11ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் வாய்ந்த திருச்சபைத் தந்தையரான கான்டர்பரியின் புனித ஆன்செல்ம் குறித்து இன்றைய மறைபோதகத்தில் காண்போம். தான் பிறந்த வட இத்தாலியின் ஆவோஸ்தா நகரில் துறவறக் கல்வியைப் பெற்ற இப்புனிதர், நார்மென்டியின் பெக்கில் உள்ள பெனடிக்டன் துறவு மடத்தில் இணைந்தார். அங்குள்ள துறவு மட அதிபரான பவியாவின் லான் ஃப்ராங்கின் வழிகாட்டுதலுடன் ஜெபத்திலும் மேலும் கற்றுக்கொள்ளுதலிலும் தன்னையே அற்பணித்துக் கொண்ட புனித ஆன்செல்ம், பின்னர் பெக் துறவுமடத்தின் அதிபராகவும் தேர்வுச் செய்யப்பட்டார். சில காலத்திற்குப் பின் லான் ஃப்ராங்கைத் தொடர்ந்து கான்டர்பரியின் பேராயராகவும் பதவியேற்றார். நார்மன் ஆக்ரமிப்பின் துவக்கக் காலத்தில், தலத்திருச்சபையின் வாழ்வை மறு சீரமைப்பதிலும், அரசியல் பிடிகளிலிருந்து நீதியான சுதந்திரத்தைப் பெறுவதிலுமான போராட்டமாக புனித ஆன்சலெமின் இங்கிலாந்து வாழ்க்கைக் காலம் இருந்தது. இப்போராட்டக் காலத்தில் மூன்றாண்டுகள் இவர் நாடு கடத்தப்பட்டார். இந்த மிக உன்னத ஆன்மீகத் தலைவர், அறிவாற்றல் நிறைந்த ஆசிரியராகவும், எழுத்தளராகவும், இறையியல் வல்லுனராகவும் திகழ்ந்தார். இவரின் மிகவும் புகழ் வாய்ந்த ஏடான ப்ரொஸ்லோஜியோனின் முன்னுரை ஜெபத்தில், அவரின் இதயம் ஏற்கனவே அன்பு செய்து நம்பிக்கைக் கொண்டிருந்த தெய்வீக உண்மையான விசுவாசத்தை புரிந்துக் கொள்வதற்கான ஆவல் வெளிப்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். ஆண்டவராம் இயேசு மற்றும் அவரின் திருச்சபையில் ஆழமான அன்பு கொண்டிருக்கவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் மறைபொருட்களை மேலும் பலன் தரும் வகையில் தியானிக்கவும், புனித ஆன்செல்மின் வாழ்வும் போதனைகளும் நம்மைத் தூண்டுவதாக எனக்கூறி தன் புதன் மறை போதகத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை.

தன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.