2009-09-22 18:58:58

செப். 23 - இன்றையப் புனிதர்: புனித பாத்ரே பியோ.


1887 இல் இத்தாலியில் பிறந்த இவர் பிரான்செஸ்கோ என்று அழைக்கப்பட்டார். 15 வது வயதில் கப்புச்சின் சபையில் சேர்ந்து, பியோ என்ற பெயரை ஏற்றார். 22 வது வயதில் குரு பட்டம் பெற்றார். 58 ஆண்டுகள் குருத்துவ வாழ்வில் உடல் அளவில் அதிக துன்பங்களைத் தாங்கினார். முதல் உலகப் போரின் போது, அந்தப் போர் முடிவுக்கு வருவதற்குத் தன்னையே பலியாக அளிப்பதாக வேண்டிக்கொண்டார். 1918 ஆம் ஆண்டு அவர் உடலில் இயேசுவின் திருக்காயங்கள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இந்தத் திருக்காயங்கள் பல சர்ச்சைகளை எழுப்பின. இறுதியாக, திருத்தந்தை ஆறாம் பால் 1960 களில் அருட்தந்தை பியோ மீதிருந்த அனைத்து சந்தேகங்களையும் நீக்கி, மக்கள் அவரைச் சந்திக்கவும், அவரது திருப்பலிகளில் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்தார். 1968 ஆம் ஆண்டு செப். 22 ஆம் நாள் உடல் நலம் வெகுவாக குன்றியிருந்த போதிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் திருப்பலி நிகழ்த்தினார். திருப்பலியின் இறுதியில், அவரை மற்றவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அடுத்த நாள், செப். 23 மதியம் உயிர் துறந்தார். 2002 ஆம் ஆண்டு  திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவரைப் புனிதராக உயர்த்தினார். திருச்சபையில் இன்று மிகவும் பிரபலமான புனிதர் இவர் என்று கருதப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.