2009-09-21 10:52:36

'பசுமைப் பாப்பிறை' - திருப்பீடப் பேச்சாளர் 


செப். 19, 2009 சுற்றுச் சூழல், அதாவது இறைவனின் படைப்பு காக்கப்பட வேண்டும் என்பதற்கு திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் ஒரு சிலரால் அவர் 'பசுமைப் பாப்பிறை' என அழைக்கப் படுவதாகக் கூறினார், திருப்பீடப் பேச்சாளர் குரு பெடெரிகோ லோம்பார்தி.

இன்றைய நியாயமற்ற நடவடிக்கைகளால் உலகின் சமச்சீர் நிலை பாதிக்கப்பட்டு வருவது குறித்து கவலை கொண்டுள்ள சமூகம், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தயாரிப்பு கருத்தரங்கை வரும் நாட்களில் நியூ யார்க்கில் நடத்தவுள்ளது குறித்து நினைவூட்டிய திருப்பீடப் பேச்சாளர், இதற்கு உதவும் வகையிலான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே திருத்தந்தையின் பல்வேறு உரைகளில் காணக் கிடக்கின்றன என்றார்.

மனித குலத்திற்கான ஒவ்வொரு திட்டமும் அன்பிலும், உண்மையிலும் மேற்கொள்ளப்பட்டு, அதனால், பயன்பெற உள்ள மக்கள் மீது கொண்ட அக்கறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் மீண்டும் எடுத்துரைத்தார், திருப்பீடப் பேச்சாளர்.








All the contents on this site are copyrighted ©.