2009-09-17 14:37:14

ப்ரசில் ஆயர்களுக்கான திருத்தந்தையின் உரை.


செப். 18, 2009 இன்றைய நவீன உலகில் குருக்களின் இடம், மற்றும் அவர்களுக்கு வழங்கவேண்டிய பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ப்ரசில் ஆயர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அட் லிமினா சந்திப்பையொட்டி ரோம் நகர் வந்திருந்த ப்ரசில் நாட்டு ஆயர்களை வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, நவீன உலகில் குருக்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ஈடுபாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதோடு, அரசியல் பங்கேற்புக்கு பொதுநிலையினரை ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எந்த ஒரு குருவும் அனைத்து விசுவாசிகளுக்கும் பொதுவானவர் என்பதால், தனிப்பட்ட அரசியல் கட்சி சார்புடயவராகச் செயல்படமுடியாது எனவும் விளக்கினார் பாப்பிறை.

நற்செய்தியை அறிவிப்பதிலும், திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதிலும் குருக்களின் பங்கு இன்றியமையாதது என்பதை மனதில் கொண்டவர்களாய், தேவ அழைத்தல்கள் பெருக ஒவ்வொரு விசுவாசியும் செபிக்க ஊக்குவிக்கவேண்டிய ஆயர்களின் கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை.

ப்ரிசில் நாட்டில் வழ்ந்து, ஈராண்டுகளுக்கு முன் புனிதராக அறிவிக்கப்பட்ட துறவி அந்தோணியோ தெ சாந்த் அன்னா கல்வாயோவின் எடுத்துக்காட்டையும் குருக்களுக்கு முன்வைப்பதாக ப்ரசில் நாட்டு ஆயர்களிடம் கூறினார் பாப்பிறை.

உலகில் அதிக எண்ணிக்கையில் கத்தோலிக்கர்கள் வாழும் நாடு ப்ரசில் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.