2009-09-17 10:07:38

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


"புதிய மறையியலாளர்" என்று அறியப்படும் கீழைநாடுகளின் துறவி சிமியோனின் வாழ்வு குறித்து இன்றைய மறைபோதகத்தில் காண்போம் என தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஆசியா மைனரில் அதாவது அண்மை கிழக்கு பகுதியில் 949ம் ஆண்டு பிறந்தார் சிமியோன். இளைஞனாக இருந்தபோது, அரசுப்பணியை நாடி கான்ஸ்தாந்திநோபிளுக்குச் சென்ற இவர், தன் படிப்புக்காலத்தில் 'மாற்கு என்ற துறவியின் ஆன்மீகச்சட்டம்' என்பது குறித்து கற்றறியும் வய்ப்புக் கிட்டியபோது, அவர் வழ்வு முற்றிலுமாக மாற்றம் கண்டது. 'நீ ஆன்மீகக் குணம் பெற விரும்பினால், மனச்சான்று குறித்த விழிப்புணர்வைக் கொண்டிரு. அது என்னென்ன சொல்கிறதோ அதையெல்லாம் ஆற்று. உனக்குப் பயனுடையதை அதில் கண்டுகொள்வாய்' என அதில் காணப்பட்டது. இதை வாசித்த நாளில் இருந்து, மனச்சான்றிற்கு செவிமடுப்பதையே தன் வாழ்க்கைப் பாதையாக ஆக்கிக்கொண்டார் சிமியோன். இவர் ஒரு துறவியானார். பின்னர் இவரின் சீடர் ஒருவரால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இவரின் வாழ்வு சரிதமும் எழுத்துக்களும், திருமுழுக்குப் பெற்ற அனைவரின் வாழ்விலும் தூய ஆவியின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இவர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. கிறிஸ்தவ வாழ்வு என்பது கடவுளுடன் ஆன மிக ஒன்றிணைந்த மற்றும் நெருங்கிய ஐக்கியம் என்பதை சிமியோன் நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைப் பற்றிய உண்மையான அறிவு என்பது புத்தகங்களிலிருந்து கிட்டுவதில்லை, மாறாக, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான திருமுழுக்கின் கனியாகும். சிமியோனின் வாழ்வால் தூண்டப்பட்டு, இறை அன்பில் வளர்வதற்கான வழிகாட்டுதல்களை தேடுபவர்களாய் நம் ஆன்மீக வாழ்வில் அதிகக் கவனம் செலுத்துவோம் என்ற வேண்டுகோளுடன் இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.