2009-09-14 13:58:12

பாகிஸ்தானில் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயம் ஒன்றை நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்


செப்.14,2009 பாகிஸ்தானில் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர், குரான் புனித நூலைக் கிழித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயம் ஒன்றை நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் ஜெய்திக்கே நகரில் ஒரு கிறிஸ்தவ வீட்டின் முன்பாக குரான் புனித நூலின் பக்கங்கள் கிழிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் தேவநிந்தனை செய்தவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டு கிறிஸ்தவ ஆலயத்திற்கும் தீ வைத்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அந்தப் பகுதியில் பதட்டநிலை உருவாகியதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமெனக் காவல்துறைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு கிறிஸ்தவ இளைஞருக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்குமிடையே ஏற்பட்ட உறவே இவ்வன்முறைக்கு மூல காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் இவ்வாண்டில் இதுவரை கிறிஸ்தவர்க்கெதிராக ஏழு வன்முறை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.