2009-09-10 16:22:01

கொலம்பியாவில் சவேரியன் மறைபோதக சபை அருள்தந்தை ஒருவர் காட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது


செப்.10,2009. கொலம்பியாவில் சவேரியன் மறைபோதக சபையைச் சேர்ந்த அருள்தந்தை குஸ்தாவோ வெலேஸ் வாஸ்கெஸ், காட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் நம்பத் தகுந்த வட்டாரங்கள் அறிவித்தன.

கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள புனித செபஸ்தியான் இயற்கைப் பாதுகாப்பு இடத்தில் கடந்த ஞாயிறு முதல் காணாமற்போயிருந்த 79 வயதாகும் அருள்தந்தை வாஸ்கெஸின் சடலத்தை இப்புதன்மாலை விவசாயிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தந்தை கலிக்ஸ்டோ என்று கடந்த 31 வருடங்களாக அழைக்கப்பட்டு வந்த இவர் குறைந்தது நான்கு மணி நேரம் நடந்துள்ளார் என்றும் இவரது உடலில் காயங்கள் இருந்தன என்றும் காவல்துறை கூறியது.

பாதுகாப்புப் படையினர் உட்பட 500க்கு மேற்பட்டவர்கள் இக்குருவைத் தேடும் பணியில் இறஙிகியிருந்தனர் என்றும் ஊடகங்கள் கூறின.

மேலும், FARC என்ற கொலம்பிய புரட்சிப் படையினால் பல ஆண்டுகள் பிணையலில் வைக்கப்பட்டுள்ள 10 படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் பற்றிய ஒளிக்காட்சிப் படங்கள் அந்நாட்டில் மக்கள் மத்தியில் பரவலாக கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றன என்று மிஸ்னா கூறியது.

பிணையலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் மிகவும் மோசமான நிலையில் சங்கிலிகளால் கட்டப்பட்டுள்ளனர் என்று கூறிய ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரி, இத்தகைய மனிதமற்ற செயலை வன்மையாய்க் கண்டித்துள்ளார்.

தற்சமயம் கொலம்பிய புரட்சிப் படையிடம் 24 பேர் சுமார் 12 ஆண்டுகளாக பிணையலில் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.