2009-09-08 16:50:33

தென் சூடான் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைத்திருப்பது வளர்ச்சிக்கு அச்சுறுத்தல், கிறிஸ்தவ அமைப்பு


செப்.08,2009 தென் சூடான் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைத்திருப்பது, அப்பகுதியின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இயேசு சபை அகதிகளுக்கான அமைப்பின் கிழக்கு ஆப்ரிக்க அலுவலகம் எச்சரித்தது.

இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இவ்வாறு அறிக்கை வெளியிட்ட அவ்வலுவலகம், தென் சூடான் அரசு, கல்விக்கான ஒதுக்கீட்டை 13 கோடியே 40 இலட்சம் டாலரிலிருந்து 10 கோடி டாலராகக் குறைத்திருப்பது பற்றிய வருத்தத்தையும் தெரிவித்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தென் சூடானில் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ள போதிலும், சிறுமிகள் பள்ளிக்குச் செல்வது சிறுவர்களைவிட குறைவு என்றும் தெரிவித்தது.

சூடானின் உறுதியான எதிர்காலத்திற்கு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித மாண்பைக் காப்பதும், அரசியல் ரீதியாக பக்குவமடைந்த குடிமக்களை உருவாக்குவதும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் மிகவும் இன்றியமையாதது என்றும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கான இயேசு சபை அகதிகள் அமைப்பு கூறியது.








All the contents on this site are copyrighted ©.