2009-09-07 16:31:13

எழுத்தறிவு பெறுவது, சுயமரியாதை மற்றும் மனித மாண்பைப் பெற்றுத் தருகிறது, யுனெஸ்கோ


செப்.07,2009 எழுத்தறிவு என்பது, எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் மட்டும் தெரிந்தால் போதுமானது என்பதல்ல, மாறாக, இது சுயமரியாதை மற்றும் மனித மாண்பைப் பெற்றுத் தருகிறது என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனத் தலைவர் கொய்கிரோ மாட்சுரா கூறினார்.

செப்டம்பர் 8ம் தேதி, இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்படும் சர்வதேச கல்வியறிவு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மாட்சுரா, இளையோருக்கும் வயதுவந்தோருக்கும் எழுத்தறிவு புகட்டும் நடவடிக்கையை அரசுகளும் வணிக அமைப்புகளும் நிறுவனங்களும் புறக்கணிக்காமல் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் கல்வியறிவை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் உலக அளவில் பரவலாக உணரப்பட்டாலும் இன்னும் உலகில் 77 கோடியே 60 இலட்சம் வயதுவந்தோர் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். 7 கோடியே 50 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர் என்றும் அவரின் செய்தி கூறுகிறது.

கல்வியறிவின்மைக்கும் வறுமைக்கும் மிகுந்த தொடர்பு இருப்பதாகக் கூறும் அச்செய்தி, கல்வியறிவு, சமூக மாற்றத்திற்கும் ஏழ்மையை ஒழிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகின்றது என்றும் சுட்டிக்காட்டுகின்றது.

எழுத்தறிவும் மக்கள் சக்திக்கு உந்துதல் அளிப்பதும் என்ற தலைப்பில் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தலைப்பு, ஐ.நா.வின் 2003-2012ம் ஆண்டின் பத்தாண்டு திட்டத்தின் தலைப்பும் ஆகும்.








All the contents on this site are copyrighted ©.