2009-09-07 16:30:09

இரண்டாம் உலகப் போர் பற்றிய நினைவு, அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு நம்மைத் தூண்ட வேண்டும், திருத்தந்தை


செப்.07,2009. இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதப்படுகொலைகள் பற்றிய நினைவு, அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு நம்மைத் தூண்ட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

மனிதனில் இறைவனின் சாயலை உருக்குலையச் செய்யும் வன்முறை, இனப்பாகுபாடு, சர்வாதிகாரம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மன்னிப்பையும் ஒப்புரவையும் ஊக்குவிப்பதில் மதங்கள் முக்கிய பங்காற்ற முடியும் மற்றும் பங்காற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியதன் எழுபதாம் ஆண்டையொட்டி, போலந்து நாட்டு கிராக்கோவில், “உரையாடலில் விசுவாசங்களும் கலாச்சாரங்களும்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பல்வேறு மதங்களின் எண்ணற்ற பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை இவ்வாறு வலியுறுத்தினார்.

இஞ்ஞாயிறன்று வித்தெர்போ நகருக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட போது அவர் வழங்கிய மூவேளை செப உரையில் அப்பிரதிநிதிகளை வாழ்த்திய பாப்பிறை, வரலாற்றில் மிகக் கொடூரமாக இடம் பெற்ற இப்போரின் காயங்களை உடலிலும் உள்ளத்திலும் தாங்கி இருப்போருக்காகச் செபிப்போம் என்றும் கூறினார். RealAudioMP3

இந்த உலகப் போரின் நினைவானது, வரலாற்றில் மீண்டும் இத்தகைய கொடூரங்கள் நிகழாதிருப்பதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, அன்பு மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலிலிருந்து அமைதிக்கான பாதைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த உலகப் போரை நினைவுகூருவது, வருங்காலத் தலைமுறைகளுக்கான அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நாத்சி ஜெர்மனி, போலந்தைத் தாக்கியதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது.







All the contents on this site are copyrighted ©.