2009-09-03 13:49:37

உண்மையைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியில் ஆன்மீகம் இணைந்து செல்ல வேண்டும், திருத்தந்தை


செப்.03,2009. அன்றாட வாழ்வின் பிரச்சனைகள், கவலைகள், தோல்விகள் ஆகியவற்றின் மத்தியில் ஆன்மீக வாழ்வு தூரமாகச் சென்று கொண்டிருப்பது போல் உணரப்படும் ஒரு கண்டத்திற்கு, ஆன்மீகப் பயணம் முக்கியமானதாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதன் மாலை கூறினார்.

இக்காலத்தில் உண்மையைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியிலும் ஆன்மீகம் இணைந்து செல்ல வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நாம் நம்மாலே உண்மையைக் கண்டறிய முடியாது, ஆனால் உண்மையாய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவில் அதனைக் கண்டு கொள்ள முடியும் என்றும் கூறினார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் இத்தாலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவிருக்கின்ற புனித அகுஸ்தீனாரின் வாழ்வு பற்றிய சின்னத்திரை தொடர் நிகழ்ச்சியின் தொகுப்புக்களை இப்புதன் மாலை காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் பார்த்த பின்னர் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

வயதான புனித அகுஸ்தீன் தனது இறப்பிற்குச் சற்று முன்னதாகத் தனது வாழ்வைத் திருப்பி பார்த்த 430ம் ஆண்டு நிகழ்விலிருந்து இத்தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது.

இத்தொடர் நிகழ்ச்சியை ஜெர்மனி, போலந்து மற்றும் இத்தாலி நாடுகளின் தொலைக்காட்சி அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.