2009-09-02 16:12:45

சியரா லியோனில் முதல் கத்தோலிக்கப் பல்கலைகழகம் ஜனவரியில் திறப்பு


செப்.02,2009. பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்ட சியரா லியோனில், அந்நாட்டின் முதல் கத்தோலிக்கப் பல்கலைகழகம் வருகின்ற ஜனவரியில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான சியரா லியோனின் மக்கேனியில் கத்தோலிக்கப் பல்கலைகழகம் திறப்பதற்கான திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக மக்கேனி ஆயர் ஜார்ஜ் பிகுட்சி கூறினார்.

பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரைச் சந்தித்த அந்நாடு தற்சமயம் அமைதியில் வாழ்கின்றது என்றும் கூறிய ஆயர், இந்த உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் கல்விக்கான தாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

சியரா லியோன் நாடு, நிதியைப் பொருத்தவரை பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது பத்து விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அந்நாடு தனது செலவிற்கான 60 விழுக்காட்டுத் தொகையை சர்வதேச அமைப்புக்களிடமிருந்தே பெறுகின்றது என்றும் ஆயர் பிகுத்சி கூறினார்.

ஏறத்தாழ 55 இலட்சம் மக்கட்தொகையைக் கொண்ட அந்நாட்டில் 80க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.