2009-09-01 17:00:41

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து கற்றுக் கொடுக்கும் புதிய திட்டத்தை கேரள தலத்திருச்சபை தொடங்கவுள்ளது


செப்.01,2009 பலவகையான காய்ச்சல்கள், மக்களின் அன்றாட வாழ்வை முடக்கிப் போட்டுள்ள வேளை, சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் புதிய திட்டத்தை கேரள தலத்திருச்சபை தொடங்கவுள்ளது.

கேரளாவின் தாமரச்சேரி மறைமாவட்டத்தை உள்ளடக்கிய கோழிக்கோடு மாவட்டத்தில் சிக்கன் குன்யா, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் எனப் பலவகையான காய்ச்சல்களால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து யூக்கா செய்தி நிறுவனத்திடம் பேசிய தாமரச்சேரி மறைமாவட்ட ஆயர் பவுல் சிட்டிலப்பில்லி, பலவகையான காய்ச்சல்கள் திருச்சபையின் வாழ்வை முடக்கியுள்ளன மற்றும் காய்ச்சல் குணமான இரண்டு மாதத்திற்குப் பின்னரும்கூட மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர் என்று கூறினார்.

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு கடந்த ஆண்டில் திருச்சபை எடுத்த முயற்சிக்கு மக்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காவிட்டாலும் இவ்வாண்டு அதனை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக ஆயர் சிட்டிலப்பில்லி தெரிவித்தார்.



 








All the contents on this site are copyrighted ©.