2009-08-29 15:07:57

வவுனியா முகாம்களில் வாழும் ஒவ்வோர் அகதியும் மனித மாண்பு மற்றும் சுதந்திரத்துடன்கூடிய புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு மிகவும் ஏக்கமாக இருக்கிறார்கள்


ஆக.29,2009. இலங்கை வவுனியா முகாம்களில் வாழும் ஒவ்வோர் அகதியும் மனித மாண்பு மற்றும் சுதந்திரத்துடன்கூடிய புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு மிகவும் ஏக்கமாக இருக்கிறார்கள் என்று அம்முகாம்களில் பணி செய்த அருள்சகோதரி பாத்திமா நாயகி கூறினார்.

வடஇலங்கையில் போரில் அகதிகளாகி முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் வாழ்கின்ற மக்களுக்கு அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு வழியாக மூன்று மாதங்களாகப் பல துறவு சபைகளைச் சேர்ந்த 24 அருள்சகோதரிகள் பணியாற்றினர்.

இச்சகோதரிகள் குழுவிற்குத் தலைமை தாங்கி வழிநடத்திய அருள்சகோதரி பாத்திமா விவரிக்கையில், மருத்துவமனைகளில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் மத்தியில் மட்டுமே தாங்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆயினும் எத்தனையோ கர்ப்பிணி பெண்கள் இருந்தார்கள், அவர்களில் சிலர் கணவன்களை இழந்து துணிகள் மட்டுமே வைத்திருந்தார்கள் என்றும் அச்சகோதரி கூறினார்.

மேலும், இந்த முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ள குருக்கள் மீண்டும் அங்கே சென்று பணிசெய்வதா அல்லது ஆயர் குறித்துள்ள இடத்திற்குச் சென்று பணியைத் தொடர்வதா என்ற இருவகை குழப்பத்தில் இருக்கின்றனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி இந்த ஆகஸ்ட் பாதி வரை வவுனியா மாவட்டத்தில் 19

முகாம்களில் இரண்டு இலட்சத்து 46 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்தனர்.








All the contents on this site are copyrighted ©.