2009-08-28 20:50:52

வழிபாட்டு ஆண்டின் 22 ஆவது ஞாயிற்று விழா .300809.


இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது

தூய மாற்கு அதிகாரம் 7 . திருவசனங்கள் 1-8 , 14-15 , 21-23 .



ஒரு மதத்தின் மையமாக இருப்பது ஆசாரங்கள் அல்ல . சட்டங்களும் அல்ல . ஆனால் கடவுளையும் பிறரையும் அன்பு செய்வதாகும் .



வில்லியம் பார்க்லே என்ற ஸ்காட்லாண்டு நாட்டுச் சமய அறிஞர் உரோமையின் சிறையிலிருந்த ஒரு யூத மதகுரு பற்றிக் கூறுகிறார் . அவர் சிறையிலிருந்தபோது போதுமான அளவு தண்ணீரும் உணவும் அவருக்கு வழங்கப்பட்டது . ஆனால் நாள் செல்லச் செல்ல அந்த மதகுரு மிகவும் பலவீனமாகிக் கொண்டிருந்தார் . இறுதியில் ஒரு மருத்துவர்

வர வழைக்கப்பட்டார் . அவருக்குத் தண்ணீர் சத்துக் குறைவாக இருந்தது . சிறை அதிகாரிக்கு இதன் காரணம் தெரியவில்லை . அவருக்கு ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. காவலர்கள் அந்த முதியவர் தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைக் கவனிக்குமாறு ஆணையிடப்பட்டார்கள் . குழப்பம் தீர்ந்தது . முதியவர் மத ஆசாரங்களுக்காக செபிப்பதற்கு முன்னரும் உணவு உட்கொள்வதற்கு முன்னரும் தண்ணீரால் கை கால்களைக் கழுவிக் கொண்டதால் தண்ணீர் அதிக அளவு செலவாகியது . அதனால் அவர் போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை .

இன்றைய நற்செய்தியைப் புரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி நமக்கு உதவியாக இருக்கும் . இயேசுவின் சீடர்கள் கை கால்களை ஆசாரப்படி கழுவாமல் உண்டது யூதத் தலைவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது .

இதன் காரணமாக இன்றைய நற்செய்தி முக்கியமாகிறது . இயேசுவுக்கும் யூதமதத் தலைவர்களுக்குமிடையே எழுந்த வாக்குவாதம் பற்றி இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது .



இன்றைய வாக்குவாதம் பற்றி நாம் சிறிது கவனிப்போம் . யூதர்கள் சட்டங்கள் பற்றிக் கூறும்போது அவர்கள் எழுத்து வடிவமாக வந்த சட்டங்களையும் பாரம்பரிய வழி , வாய்வழி வந்த சட்டங்களையும் பற்றிக்கூறுவர் .

இவற்றில் காலத்தால் முந்தையதும் முக்கியமானதும் எழுத்து வடிவில் வந்த சட்டங்கள் . இந்தச் சட்டங்கள் விவிலியத்தின் தோரா என்ற முதல் ஐந்து நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன . அவை சில சமயம் மோசேயின் சட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன .

இவற்றில் சில சட்டங்கள் மிகவும் தெளிவானவை . குறிப்பாகச் சிலவற்றைப் பற்றிக்கூறுபவை . சில வழிகாட்டுவதற்காக தரப்பட்ட செயல் திட்ட ஒழுங்குமுறைகள் . யூதர்கள் பலகாலமாக இந்த வழிகாட்டும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி வந்தனர் .

கி.மு ஐந்தாவது நூற்றாண்டில் இந்த ஒழுங்குகளை தெளிவு படுத்தி சட்டங்களாக மாற்றினர் சதுசேயர் என்ற சட்ட வல்லுநர்கள் . இவை வாய்வழிவந்த எழுதாத சட்டங்களாக கடைப்பிடிக்கப்பட்டன . இதை யூதர்கள் வாழையடி வாழையாகப் பின்பற்றத் தொடங்கினர் .

எடுத்துக்காட்டாக கோவில்களில் செப வழிபாட்டை நடத்துவதற்கு முன்னர் கைகளையும் கால்களையும் குருக்கள் கழுவிச் சுத்தம் செய்து கொண்டனர் . இது ஆசாரப்படி பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதாக அமைந்தது .

இதை மக்களும் பின்பற்றத் தொடங்கினர் . செபம் செய்வதற்கு முன்னரும் உணவை உட்கொள்வதற்கு முன்னரும் தங்கள் கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளத் தொடங்கினர் .

இயேசுவின் காலத்தில் இந்த விதி முறைகளை எழுதப்பட்ட தோரா என்ற மோசேயின் சட்டங்களைப்போலவே மக்கள் மிகவும் பிரமாணிக்கமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர் .

இந்த வழிகாட்டு ஒழுங்குகள் பக்தியை வளர்க்கப் பெரிதும் உதவின . எல்லாச் செயல்களையும் இறைவனின் அருளோடு தொடங்க வழிகாட்டின .

ஆனால் இந்த பக்தி முயற்சிகள் காலப் போக்கில் பேராபத்தில் சிக்கிக் கொண்டன . கடவுள் பக்தி வெறும் வெளி ஆசாரங்களாக மாறிவிட்டன .

இந்த ஆசாரங்களைப் பின்பற்றுவது கடவுளுக்குச் சாற்றும் அஞ்சலியாகக் கருதப்பட்டது . அவற்றைக் கடைப்பிடிக்காதது கடவுளுக்கே எதிரான பாவம் எனக் கருதப்பட்டது . சுருக்கமாக இந்த ஆசாரங்களைக் கடைப்பிடிப்பது கடவுள் பக்தியாக , கடவுளுக்குச் சேவை செய்வதாகக் கருதப்பட்டது .

இதை விளக்க வரும் இறையியல் வல்லுநர் வில்லியம் பார்க்லே இவ்வாறு கூறுகிறார் . ஒருவர் மற்றொருவரை மிகவும் கடுமையாக வெறுத்து ஒதுக்கலாம் . ஆனால் அவர் இந்த ஆசாரங்களைப் பின்பற்றினால் , கைகளையும் கால்களையும் உண்பதற்கு முன்னரும் , செபிப்பதற்கு முன்னரும் கழுவிக்கொண்டால் மனத்தில் வஞ்சம் வரமம் இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் வாழ ஆரம்பித்தனர் .

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நிர பிற

மனத்தில் குற்றமில்லாமல் இருத்தலே நல்ல அறமாகும் . மற்றவை வெளிவேடங்களே ஆகும் என்று வள்ளுவர் கூறுவார் . மேலும் , உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டுவிட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய வேடங்கள் வேண்டாம் எனக்கூறுவார் .

மதங்கள் கடவுள் பெயரால் கொலை வெறி பிடித்துக் கொண்டு மதயானைகளாக மாறியிருப்பதையும் காண்கிறோம் . அதனால்தான் மதச் சுதந்திரங்கள் பல நாடுகளில் பறிக்கப்பட்டுள்ள அவல நிலை உருவாகி மதத்தின் பெயரால் போர்கள் உருவாகி மனிதன் அடுத்த மதத்தவரைக் கொல்லும் அளவுக்குப் பைத்தியக்காரனாக மாறிவிடுகிறான் .

இவ்வாறு கொல்லும்போதும் ஆண்டவனிடம் பிரார்த்தித்துவிட்டு ஆண்டவன் பெயரால் கொல்கிறான் . இப்படிச் மதச் சம்பிரதாயங்களைப் பின்பற்றிக் கொண்டு பித்துப்பிடித்து அலைவதை இயேசு எதிர்த்தார் . இரக்கமே உருவான இயேசு பெருமான் வெளிவேடதாரிகளைக் கடுமையாகத் தாக்குகிறார் . உள்ளத்தில் நல்லெண்ணம் , சொல்லில் வாய்மை , செயலில் நேர்மை உள்ளவரே இறைவனின் அருளைப் பெறுவர் .

இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன .

மதத்தை சில சம்பிரதாயங்களோடு இணைத்துக் கொண்டு அவ்வாறு செய்யாதவர்களை ஒதுக்குவது தவறாகும் .



அதாவது கோவிலுக்குச் செல்வது , விலிலியத்தை வாசிப்பது , செபங்களைச் சொல்வது , தானமீவது போன்றவை ஒருவரைப் புனிதராக மாற்றிவிடமாட்டா .

இவற்றையெல்லாம் தவறான நோக்கோடு நாம் செய்யலாம் . அன்பில்லாது நாம் இந்த ஆசாரஙகளைக் கடைப்பிடிக்கலாம் . அன்பில்லாத உடல் எலும்பைத் தோலால் போர்த்திய கூடாகும் .



கொலை , களவு , கள் காமம் கோபம் விட்டால் அன்றோ

மலை இலக்கா நின் அருள்தான் வாய்க்கும் பராபரமே .

உள்ளம் குழைய , உடல் குழைய , உள் இருந்த

கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே .





நாம் செய்யும் செயல்கள் அல்ல . நாம் செய்யும் செயல்களை எந்த அளவு அன்போடு செய்கிறோம் என்று நாம் கவனிக்கவேண்டும் .

நம் உள்ளங்களில் வெறுப்பும் கசப்பும் செருக்கும் நிறைந்திருந்தால் நாம் கடவுள்முன் தூயவர்கள் எனக் கூறிக்கொள்ளமுடியாது .

நம் உள்ளங்களை ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறது இன்றைய நற்செய்தி . கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில் , துன்புறும் வறியோர்க்கு ஈதல் , மனத்தில் மாசில்லாதவர்களாக , உலகத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

சமயப் பற்று என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட ஏன் செய்கிறோம் என்பதாகும் . நம் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பு - கடவுள் மீது காட்டும் அன்பு பிறர்மீது காட்டும் அன்பு இவையே முக்கியமாகும் .

திருத்தூதர் முதல் கொரிந்தியர் 13 அதிகாரத்தில் கூறியுள்ளதை பக்தியோடு செவிமடுப்போம் .

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன் .

அன்பு பொறுமையுள்ளது . நன்மை செய்யும் . பொறாமைப்படாது . தற்புகழ்ச்சி கொள்ளாது . அன்பு இழிவானதைச் செய்யாது .தன்னலம் நாடாது . தீங்கு நினையாது . எரிச்சலுக்கு இடம் கொடாது . அன்பு தீவினையில் மகிழ்வுறாது . அன்பு ஒருபோதும் அழியாது . எந்நாளும் அன்பு செலுத்த முயலுங்கள் என்கிறார் தூய பவுல் அடிகளார் .



இனிய உள்ளங்களே இந்த வார்த்தைகளோடு நான் வத்திக்கான் வானொலியில் என் மூன்றாண்டுப் பணியை நிறைவு செய்கிறேன் . நம் அனைவருக்கும் இதுநாள்வரை ஆண்டவர் தந்த வரங்களுக்கும் இனித் தரவிருக்கும் கோடி வரங்களுக்கும் நாம் எந்நாளும் அவருக்கு நன்றி செலுத்துவோம் .








All the contents on this site are copyrighted ©.