2009-08-26 10:24:49

விவிலியத் தேடல் . பிறவிக்குருடர் பார்வை பெறுதல் .


இந்நிகழ்ச்சியை நமக்குத் திருத்தூதர் யோவான் வழங்குகிறார் .

யோவான் நற்செய்தி அதிகாரம் 9 . முதல் 12 திருவசனங்கள் .

இந்நிகழ்ச்சி இயேசு தாமே உலகின் ஒளி என்றும் , இயேசுவைப் பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் . வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்ற யோவான் அதிகாராம் 8, திருவசனம் 12 ல் கூறப்பட்டதைத் தெளிவாக்குகிறது .

இந்நிகழ்ச்சி எருசலேத்தில் திருவிழாவின் போது நடக்கிறது . பிறவியிலேயே விழி இழந்த ஒருவர் பார்வை பெறுகிறார் . இந்த அதிசயம் சீடர்களுடைய நம்பிக்கையை இயேசுவின்மீது வலுப்படுத்துகிறது . சீடர்கள் இவர் பார்வையற்றவராக இருப்பதற்குக் காரணம் இவர் செய்த பாவமா , இவர் பெற்றோர் செய்த பாவமா என இயேசுவிடம் கேட்கிறார்கள் . இயேசு மறுமொழியாக , இவர் செய்த பாவமும் அல்ல , இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல . கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப்பிறந்தார் என்றார் .

வாழ்வில் நாம் படும் துயரங்களுக்கு நாம் விடை தேட முயல்கிறோம் . மிகப்பெரிய துயரத்தில் பார்வையற்றவர் இருந்தார் . அவருக்கு இயேசு பார்வை அளித்ததோடு அவர்மீது நம்பிக்கையையும் அளித்தார் . பார்வையற்றவர் இயேசுவின் பக்தராக , சீடராக மாறினார் . பார்வையிருந்தும் பார்க்கத் தெரியாதிருந்த பரிசேயர்களுக்கே அதிசயமாகப் பார்வைபெற்றவர் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டார் . துயரத்தில் இருந்த பார்வையற்றவர் இப்போது மற்றவர்களுக்கு வழிகாட்டத் தொடங்கியது ஆண்டவரின் அருளால்தான் . எனவே துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் கடவுள் நமக்கு வழித்துணையாக வருவார் என்ற நம்பிக்கையோடு துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவம் நம்மில் பெருகவேண்டும் . நமக்கு வரக்கூடிய துன்பங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்துவதற்காக நம்மைப் புடம்போடுவதற்காக வரலாம் .

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோக்கிற்பவற்கு . என்பார் வள்ளுவர் .

அதாவது சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் துன்பத்தால் வருந்த வருந்த மெய்யுணர்வு பெருகும் என்பது வள்ளுவர் காட்டும் விளக்கம் .

கடவுளின் செயல் நம் வழியாக வெளிப்படும் என்பது இயேசு நமக்குத் தரும் விளக்கம் .

கிறிஸ்து நமக்கு ஒளியாக வருகிறார் . பகலாய் இருக்கும்வரை நாம் கடவுளின் செயலைச் செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார் இயேசு . நாம் சூழ்நிலைகளால் , கடவுளின் அருளால் உருவாக்கப்பட்டு நல்லதோர் இறைச் சமுதாயத்தை உருவாக்க அழைக்கப்படுகிறோம் . நீங்கள் உலகின் ஒளியாக , உப்பாக இருக்கிறீர்கள் என இயேசு நம்மைப்பார்த்துக் கூறுகிறார். அவர் சூரியனாக தன்னிலேயே ஒளிவீசுகிறார் . நாம் சந்திரனாக அவர் ஒளியை நம் வாழ்வில் பிரதிபலிக்க அழைக்கப்பட்டுள்ளோம் .



இயேசு அவருடைய புதுமைகளை பல்வேறு விதங்களில் புரிகிறார் . பலருக்கு இயேசு குணமளித்த புதுமைகள் நற்செய்தியில் கூறப்பட்டுள்ளன . ஒவ்வொரு புதுமையும் வெவ்வேறு விதமாக நிகழ்த்தப்படுகிறது . இயேசுவைத் தொட்டதும் குணம் பெற்றவர்கள் உண்டு . கேட்டதும் வரமருளியதும் உண்டு . அதேபோல ஆன்மீக வாழ்விலும சிலர் மெதுவாக மனமாற்றம் பெறுவதும் வேறுசிலர் உடனடியாக – சட்டி சுட்டது , கைவிட்டது எனத் தீய வழிகளை விட்டகல்வதும் நாம் அறிந்த மனமாற்றங்கள் . டோஸ்டோவ்ஸ்கி என்ற ரஷ்ய எழுத்தாளர் சூதாட்டத்தில் திளைத்தவர் . எவ்வளவோ முயன்றும் அவரால் அத்தீமையிலிருந்து விடுதலை பெறமுடியவில்லை . எத்தனையோ முறை அவர் உறுதிமொழியெடுத்து மாற்றத்துக்கு வழிசெய்தும் அடுத்த கணமே மீண்டும் மீண்டும் தவறு செய்ததாகக்கூறும் அவர் திடீரென ஒருநாள் முழுவதுமாக மனமாற்றம் பெற்றதாகத் தெரிவிக்கிறார். திருத்தூதர் பவுல் கூறுவார் – சிலர் இறை அருளால் தீய பழக்கங்களிலிருந்து முற்றிலும் சிரமமே இல்லாது விடுவிக்கப்படுவதுமுண்டு . எதிரியின் கணைகள் அவர்களைத் தாக்கமுடியாத அளவுக்கு அவர்கள் அருள் என்னும் கவசம் அணிந்தவர்கள் .

இன்று நாம் காணும் பார்வை இழந்தவருக்கு இயேசு கண்களில் களிமண் , எச்சில் இவற்றோடு சீலாவாம் என்ற குளத்தில் கழுவச் சொல்லிப் பார்வையளிக்கிறார் .

பார்வையிழந்தவரின் கீழ்ப்படிதலும் , இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அவருக்குக் குணமளிக்கிறது . அவர் பார்வை பெற்றார் .

கடவுள் மிகப்பெரிய வைத்தியர் . சிலருக்கு காலம் தாழ்த்தி மெதுவாகவே குணமளிக்கிறார் . சிலருக்கு உடனடி வைத்தியத்தால் வரும் குணம் நல்லதல்ல என ஆண்டவருக்குத் தெரியும் . ஆனால் காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல குணம் உறுதியாக வந்துவிடும் .

கடலில் தத்தளித்த ஒருவர் கரை சேர்ந்துவிட்டால் அலைகளின் அலைக்கழிப்பை நினைக்கத் தேவையில்லை . பார்வையற்றவர் பார்வை பெற்றார் . தாம் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்டிருந்த விசுவாசத்தை மகிழ்ச்சியோடு அறிவித்தார் .

எனவே நம் வாழ்விலும் நம்பிக்கையோடு கடவுளிடம் வரம் கேட்போம் . கேட்டால் கொடுக்கப்படும் . தட்டினால் திறக்கப்படும் என்பதை மறக்கவேண்டாம் .

தூய பவுல் அடிகளார் முதல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் அதிகாரம் 15, வசனம் 58 ல் இவ்வாறு கூறுகிறார் .

எனவே , அன்பார்ந்த சகோதர , சகோதரிகளே , உறுதியோடு இருங்கள் . நிலையாய் நில்லுங்கள் . ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள் .








All the contents on this site are copyrighted ©.