2009-08-26 15:01:52

சட்டத்துக்குப் புறம்பேயான குடியேற்றத்தை ஒரு குற்றச் செயல் என்பது பாவம், பேராயர் மர்க்கெத்தோ


ஆக.26,2009. சட்டத்துக்குப் புறம்பேயான குடியேற்றத்தை ஒரு குற்றச் செயல் என அறிவிக்கும் புதிய இத்தாலிய சட்டம் ஜென்மப் பாவம் என்று சொல்லி, அதற்கெதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார் திருப்பீட குடியேற்றதாரர் அவையின் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ.

கடந்த மாதத்தில் கொண்டுவரப்பட்ட “பொது மக்கள் பாதுகாப்பு” குறித்த புதிய இத்தாலிய சட்டம் பற்றிய தனது கருத்துக்களை “ஜூரிஸ்ட்” என்ற பிரிட்டன் பத்திரிகைக்குத் தெரிவித்த பேராயர் மர்க்கெத்தோ இவ்வாறு குறை கூறினார்.

வெளிநாட்டவரால் செய்யப்படும் மிகக்கொடிய குற்றங்கள், அதனால் இத்தாலியர் மத்தியில் எழுந்துள்ள பயம், பாதுகாப்பின்மை, அந்நியர் மீதான வெறுப்பு ஆகியவைகள் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொது மக்களின் கருத்தை வெளியிடுவதாய் இருக்கின்றன என்பதையும் பேராயர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும், இத்தாலியர் செய்ய விரும்பாத சிறார் மற்றும் முதியோர் பராமரிப்பு, வீட்டு வேலை, இன்னும் பிற வேலைகளால் குடியேற்றதாரர் பணிகளிலிருந்து பெறும் பலன்களை வெளியிடாமல் இருப்பது குடியேற்றதாரருக்குச் செய்யும் அநீதியாகும் என்றும் பேராயர் மர்க்கெத்தோ குறிப்பிட்டுள்ளார்.

போர்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள், மற்றும் மனிதனின் செயல்பாட்டால் ஏற்படும் பேரிடர்களால் இக்காலத்தில் மக்கள் தங்கள் தாயகங்களைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும் அவர் விவரித்துள்ளார்.

குடியேற்றதாரர் பாதுகாப்பு பற்றிய ஐ.நா. ஒப்பந்தத்தைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவர், இந்தக் குற்றங்களைச் செய்வோர்க்கெதிராய் அவர்களது சொந்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

1988ம் ஆண்டு முதல் இந்நாள்வரை ஐரோப்பிய எல்லைகளில் படகு விபத்துகளுக்குப் பலியான குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 660க்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.