2009-08-25 15:04:48

ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை, இந்திய வரலாற்றில் மிகவும் கவலைதரும் நிகழ்வுகளில் ஒன்று, கர்தினால் கிராசியாஸ்


ஆக.25,2009. ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட வன்முறைகள், இந்திய வரலாற்றில் மிகவும் கவலைதரும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவையின் உதவித் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறினார்.

ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் இடம் பெற்று ஓராண்டு ஆகியுள்ள இவ்வேளையில், இந்திய நாடு தனது மகிமையான பன்மைத்தன்மை கொண்ட கலாச்சார, சமய மற்றும் மொழி மரபுகளைக் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கர்தினால் கிராசியாஸ் மேலும் கூறினார்.

சமய சகிப்பற்றதன்மையின் கடுமையான வன்முறை நிகழ்வுகளாலும் கொலைகளாலும் குறித்துக் காட்டப்படும் கடந்த ஆண்டு இந்திய வரலாற்றின் மிகவும் சோகமான நேரங்களில் ஒன்றாக இருக்கின்றது என்றுரைத்த அவர், கடவுள் எமது நாட்டை அமைதியாலும் நல்லிணக்கத்தாலும் ஆசீர்வதிக்குமாறு செபிப்பதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த வன்முறைக் குற்றங்களைத் தூண்டியவர்கள் மற்றும் அவற்றைச் செய்தவர்கள் தாங்கள் செய்த தீமையினை உணரும்படியாக அவர்களுக்காகச் செபிப்பதாகவும் கர்தினால் கிராசியாஸ் கூறினார்.

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இலட்சுமானந்த சரஸ்வதி சுவாமிகள், மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதன் விளைவாக இந்துமத தீவிரவாதிகள் தங்களது பழிவாங்குதலைத் தீர்த்துக் கொள்வதற்காக கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.








All the contents on this site are copyrighted ©.