2009-08-25 15:02:42

ஒன்றிணைந்த ஐரோப்பாவை கட்டி எழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகளின் ஆயர்கள் அழைப்பு


ஆக.25,2009 மக்கள் மத்தியில் ஏற்படும் ஒப்புரவு ஒரு கொடை என்பதால் ஒன்றிணைந்த ஐரோப்பாவை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளைச் செபத்தால் மட்டுமல்ல, செயலாலும் அனைவரும் காட்டுமாறு ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி ஜெர்மனி போலந்தை ஆக்ரமித்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்ததன் எழுபதாம் ஆண்டு நினைவாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜெர்மனி மற்றும் போலந்து நாடுகளின் ஆயர்கள், தனிமனித இலாபங்களைப் பின்னுக்குத் தள்ளி ஐக்கிய ஐரோப்பாவுக்காக உழைக்குமாறு கேட்டுள்ளனர்.

இவ்வாறு அமைதியைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் எனவும் விண்ணப்பிக்கும் ஆயர்களின் அறிக்கை, மன்னிப்பு ஒப்புரவு, நீதி அன்பு உண்மை ஆகியவை நிலவும் சூழலிலே பொது நலனுக்குத் தொண்டாற்றும் அமைதிக் கலாச்சாரத்தை வளர்க்க முடியும் என்று கூறுகிறது.

இரண்டாம் உலகப் போர் பற்றிய தெளிவானப் புரிதலை வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்குமாறும் வலியுறுத்தும் ஆயர்கள், அந்தப் போரில் மிகுந்த துன்பங்களை அனுபவித்த போலந்து அதற்குப் பின்னும் 1990 வரை சோவியத்திடம் அனுபவித்த இடர்பாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

1939 முதல் 1945 வரை நடை பெற்ற இரண்டாம் உலகப் போர் தொடர்பான பாதிப்புக்களில் உலகில் ஐந்து முதல் ஆறு கோடிப் பேர் வரை இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.