2009-08-25 15:06:50

இலங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன குரு இன்னும் உயிரோடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் யாழ் ஆயர்


ஆக.25,2009. இலங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன குரு ஆள்நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் இன்னும் உயிரோடு இருக்கக்கூடும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

அருள்திரு திருச்செல்வம் நிஹல் ஜிம் ப்ரவுன் பொதுநிலை விசுவாசி வென்சஸ்லாஸ் வின்சென்ட் விமலதாஸ் ஆகிய இருவரும் காணாமற்போன மூன்றாம் ஆண்டு நினைவாக செய்தி வெளியிட்ட ஆயர் தாமஸ், அவர்கள் எங்காவது உயிரோடு இருக்கலாம் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொழும்பு சமூக மற்றும் சமய மையத்தில் இக்குருவின் பெற்றோர் உள்ளிட்ட ஏறத்தாழ முப்பது மனித உரிமை நடவடிக்கையாளர்கள் நடத்திய நினைவஞ்சலி கூட்டத்தில் இவ்வாறு கூறிய யாழ் ஆயர், இக்குரு காணாமற்போனது குறித்த விசாரணையை அரசு நேர்மையுடன் செய்யவில்லை என்றும் குறை கூறினார்.

அருள்திரு ஜிம் ப்ரவுன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது உள்ளூர் கத்தோலிக்கர்களைக் காப்பாற்றுவதற்காக உழைத்த அமைதி நடவடிக்கையாளர் என்று இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டார்.

இலங்கையில் 1983 முதல் 2007 வரை வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது 5516 பேர் காணாமற்போயுள்ளனர் என்று ஐ.நா.மனித உரிமைகள் அவை பதிவு செய்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.