2009-08-22 15:50:28

வழிபாட்டு ஆண்டின் 20ஆம் ஞாயிறு .நற்செய்தி யோ. 6.60-69.220809.


நாம் வாழ்வில் வெற்றி பெற பிரச்சனைகளைப் பற்றியே சிந்திக்காது கடவுள்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பது இன்றைய நற்செய்தியின் மையக்கருத்தாகும் .

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து துறைமுகத்தில் ஒரு ரஷ்ய மீன்பிடிக்கப்பல் வந்து சேர்ந்தது . அதிலிருந்து குதிர்க்கா என்ற ஒருவர் தப்பித்து அருகிலிருந்த அமெரிக்கக் கப்பலுக்குச் சென்று அமெரிக்காவில் தஞ்சம் புகுதற்காகக் கெஞ்சினார் . அமெரிக்கக் கப்பல் தலைவன் அவருக்குத் தஞ்சம் அளிப்பதற்குப்பதிலாக அவரை ரஷ்யக்கப்பலுக்கே மீண்டும் அனுப்பினார் . அவரைச் சித்திரவதைப்படுத்தி ரஷ்யச் சிறைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு குதிர்க்கா மனம் உடைந்து நலிந்து கொண்டிருந்தபோது அவரோடு இருந்த வேறொரு கைதி அவருக்கு ஆறுதல் கூறினார் . அவருக்கு ஆங்கிலக் கவிஞர் ரட்யட் கிப்பிளிங் என்பவரது சில வரிகளை மனப்பாடம் செய்யச் சொன்னார் . அந்த வரிகள் குதிர்க்காவுக்கு குளூகோசாக வேலை செய்தது . சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது நலமாக இல்லம் திரும்பி வாழ்வை மீண்டும் தொடங்கினார் .

அந்தக் கவிதை வரிகள் என்ன தெரியுமா .



வெற்றி தோல்வி என்னும் இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் நீ நிதானமாகச் சந்திக்கக் கற்றுக் கொள் .

நீ கூறிய உண்மையை பிறர் திரித்துக் கூறி மற்றவர்களை முட்டாள்களாக்கி , உனக்கு எதிராகத் தீமையைத் தரும்போதும் நீ கட்டிய எழுப்பிய வாழ்வு உன் கண்முன்னேயே சிதைந்து போகும்போது நீ அதை மீண்டும் சிரமத்தோடு கட்டி எழுப்பவேண்டிய சூழ்நிலை உருவாகும்போதும் ,

உன் உடல் வலிமையை இழந்த பிறகும் நீ இழந்த வாய்ப்புக்காக வலிந்து உழைக்க முடியுமென்றால் ,

உன்னிடம் எல்லாம் முடிந்து போனது என்ற சூழலிலும் நீ மன உறுதியோடு துணிவை இழக்காது இருந்தால் ,

இந்த உலகம் உன் காலடியில் கிடக்கும் .

மேலும் நீ ஒரு மனிதன் என்பது உறுதியாகும் .



இந்தக் கவிதை வரிகளை குதிர்க்கா நாளும் சொல்லிச் சொல்லிச் சிந்தித்தார் . மனந்தளராது உறுதி பெற்றார். பின்னர் குதிர்க்கா விடுவிக்கப்பட்டார் .

அவர் மீண்டும் இழந்த வாழ்வைக் கட்டி எழுப்பத்துணிவு பெற்றது கவிஞர் ரட்யட் கிப்பிளிங்கின் வரிகளால்தான் எனக்கூறினார்.



உலகமே அழியும் நிலையில் இருந்தாலும் சான்றாண்மையுடையோர் சிறிதும் நிலை குலையமாட்டார்கள் என்று வள்ளுவர் சொல்வார் .

இந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்திக்கு ஏற்ப ஒரு முக்கியமான கருத்தைச் சொல்கிறது .

வாழ்க்கையில் சில சமயம் நாம் நசுக்கப்படுவோம் . கையறு நிலை என்ற எல்லாம் முடிந்தது எனக்கூறும் நிலைக்குத் தள்ளப்படுவோம் . அச்சமயங்களில் நாம் எதையாவது பற்றிக்கொண்டால்தான் பிழைக்கமுடியும் .

இன்றைய நற்செய்தியில் அத்தகைய நிலைக்கு இயேசுவின் சீடர்கள் தள்ளப்படுகிறார்கள் . இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை இயேசு அவருடைய உடலை உண்ணவேண்டும் எனக்கூறியபோது நிலை குலைந்தது . தம் குருவின் உடலை உண்பதா ....அது எப்படிச் சாத்தியமாகும் .

இரண்டு வழிகளில் சீடர்கள் இந்தச் சவாலை எதிர்கொள்கிறார்கள் .

ஒரு குழுவினர் இயேசு கூறிய வார்த்தைகளை ஏற்க மறுத்து அவரை விட்டு விலகிப்போய்விடுகின்றார்கள் .

மற்றுமொரு குழுவினர் இயேசுவின் சவாலை வெற்றிகரமாக சந்தித்து இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கிறார்கள் .

முதல் சீடர்கள் குழு தோல்வி கண்டதற்குக் காரணம் என்ன . நற்செய்தி விளக்கமான பதில் தரவில்லை.

ஆனால் நமக்கு சில தடயங்கள் கிடைக்கின்றன .நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா என இயேசு கேட்கிறார்.

பேதுரு பதில் சொல்கிறார் . நாங்கள் யாரிடம் செல்வோம் ஆண்டவரே . வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே இருக்கின்றன . நாங்கள் நம்புகிறோம் . நீர்தான் வானின்று இறங்கிவந்த தேவ குமாரன் .

இருள்சூழ்ந்து செய்வது என்னவெனத் தெரியாது திகைத்தபோது சீடர்கள் இயேசுவின்மீது கண்களைப்பதித்தார்கள் . அவர்கள் வேறு சிந்தனைகளைத் தவிர்த்து இயேசுவின் மீது முழுமையாக தங்கள் பற்றுறுதியை வைத்தார்கள் .



வேறொரு சீடர்கள் குழு தப்புக்கணக்குப் போட்டார்கள். இயேசுவின் சக்தியை மறந்து இவர் எப்படி அவரது உடலை உண்பதற்குத் தரமுடியும் என்று பிரச்சனைக்கு அவர்களே விடைகாண முயன்றார்கள் .

பிரச்சனைகள் வரும்போது இயேசுவின் மீது நம் கண்களைப் பதிப்பதற்கும் , பிரச்சனையின்மீது கண்களைப் பதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் இன்னுமொரு நிகழ்ச்சியிலும் காண்கிறோம் .

ஒருநாள் இரவில் சீடர்கள் கரையை நோக்கி படகைச் செலுத்திக் கொண்டிருந்தபோது சூறாவளிக்காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது . சீடர்கள் தடுமாறிக்கொண்டிருந்தபோது கடல்மீது ஒருவர் அவர்கள் பக்கமாக நடந்து வந்தார் . அதைக்கண்ட சீடர்கள் அலற ஆரம்பித்தார்கள் . அது பேயோ பூதமோ என்று எண்ணினார்கள் .

இயேசு நான்தான் . அஞ்சாதீர்கள் என்றார் . பேதுரு நீர்தான் என்றால் நானும் தண்ணீரில் நடந்து வரவா எனக் கேட்டார் . வா என்றார் இயேசு . தண்ணீரில் நடந்த பேதுரு காற்றுப் பலமாக அடித்ததால் பயந்து அலறினார் . தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தார். ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார் .

இயேசு கையை நீட்டி அவரைப் பிடித்துத் தூக்கினார் . நீ ஏன் ஐயமுற்றாய் , அற்ப விசுவாசம் உள்ளவரே என்றார் .

இங்கு நாம் உணரவேண்டிய கருத்து இயேசுவின் மீது நம்பிக்கையைப் பதிக்கும்போது பேதுருவுக்கு எல்லாம் நலமாகவே போய்க்கொண்டிருந்தது . இயேசுவை மறந்து பிரச்சனைகளையே குறிவைத்து நோக்கியபோது பேதுரு நிலை தடுமாற ஆரம்பித்தார் .

நாமும் பேதுரு போல புயலில் சிக்கித் தவிக்கலாம் . சில சூறாவளிப் புயல்கள் நம்மை அழித்துவிடுவது போலத் தோன்றலாம் . நாமும் பேதுரைவைப்போல தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கலாம் .

இச்சூழ்நிலைகளில் நாம் பேதுருவைப் போல தவறு செய்யக்கூடாது . புயலை நினைத்துக் கலங்காது , அதாவது நமது பிரச்சனையையே நினைத்துக்கொண்டிராது இயேசுவின் மீது நம்பிக்கையை வைப்போம் .

இன்றைய நற்செய்தியில் இயேசு நற்கருணை பற்றிச் சீடர்களுக்குக் கூறுகிறார்.

வாழ்க்கையில் சில கட்டங்களில் நாமும் சில பிரச்சனைகள் காரணமாக இயேசுவை விட்டுப் பிரிய நினைக்கலாம் . அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும்போது நாம் கடவுள்மீது நாம் கொண்டிருக்கும் பக்தியை கெட்டியாக்கிக் கொண்டு அவரை நம்புவோம் .

பேதுரு சொன்னதை நினைவில் கொள்வோம் . ஆண்டவரே நாங்கள் வேறு யாரிடம் செல்வோம் .வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.








All the contents on this site are copyrighted ©.