2009-08-22 14:56:35

கியூபா மீதான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தல்


ஆக.22,2009 கியூபா மீதான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும் மற்றும் இவ்விரு நாடுகளுக்கிடையே நல்ல உறவுகளைத் தொடங்க வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பிரதிநிதிகள் மற்றும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் செயலர் உள்ளிட்ட குழு ஒன்று இவ்வாரத்தில் கியூபாவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நிருபர் கூட்டத்தில் அக்குழு இவ்வாறு அழைப்புவிடுத்தது.

இக்குழுவில் ஒருவரான பாஸ்டன் பேராயர் கர்தினால் ஜான் ஒமலே பேசுகையில், வரலாற்றில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு கியூபாவுடன் மிக நெருங்கிய உறவு இருந்திருக்கின்றது என்றார்.

கியூப அரசுக்கும் தலத்திருச்சபைக்குமிடையேயான உறவில் அண்மைக் காலங்களில், குறிப்பாக திருத்தந்தை 2ம் ஜான் பவுல், 1998ம் ஆண்டு கியூபாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது, இது தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் கர்தினால் ஒமலே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.