2009-08-22 14:55:33

ஒரிசா கிறிஸ்தவர்களின் சக்தி இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் இருக்கின்றது, பேராயர் இரபேல் சீனத்


ஆக.22,2009. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட படுகொலைகள் இடம் பெற்று ஓராண்டு ஆகியுள்ள வேளை, கிறிஸ்தவர்களின் சக்தி இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் இருக்கின்றது என்று கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் கூறினார்.

கந்தமால் வரலாற்றில் இடம் பெற்றுள்ள இந்த இருண்ட காலத்தில் கடவுளின் பராமரிப்பு வழிநடத்தியது என்பது மிகப்பெரும் ஆறுதலாக இருக்கின்றது என்று மேலும் கூறினார் பேராயர் சீனத்.

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இலட்சுமானந்த சரஸ்வதி சுவாமிகள், மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதன் விளைவாக இந்துமத தீவிரவாதிகள் தங்களது பழிவாங்குதலைத் தீர்த்துக் கொள்வதற்காக கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையைத் தொடங்கியதை நினைவுகூர்ந்த பேராயர் சீனத், ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

தீவிரவாதிகள் கிறிஸ்தவத்தை அழிக்கும் நோக்கத்தில் செயலில் இறங்கினார்கள், இது நடந்து ஓராண்டு ஆகிவிட்டது, இருந்தபோதிலும் எமது பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல கிறிஸ்தவர்கள் இன்னும் முகாம்களில் வாழ்கின்றனர், பலர் அண்டை மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர், எனினும் கணிசமான தொகையினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர், இன்னும் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்றும் ஒரிசா பேராயர் இரபேல் சீனத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.