2009-08-19 15:31:00

திருப்பீட சார்பு தினத்தாள் : கிம் தெ ஜூங்கின் உறுதியான நல்அரசியல் வாழ்வுக்கு அரணாக இருந்தது அவரது கத்தோலிக்க விசுவாசமே


ஆக.19,2009 செயோலில் இச்செவ்வாயன்று உயிரிழந்த தென் கொரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் கிம் தெ ஜூங் பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ, அவரின் உறுதியான நல் அரசியல் வாழ்வுக்கு அரணாக இருந்தது அவரது கத்தோலிக்க விசுவாசமே என்று பாராட்டியுள்ளது.

இவர் ஜனநாயக மதிப்பீடுகளுக்காகவும், வட கொரியாவுடன் ஒப்புரவு ஏற்படவும் எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டுள்ள அந்த வத்திக்கான் தினத்தாள், அந்நாட்டு இராணுவ ஆட்சியின் போது அவர் சிறையில் அடைக்கப்பட்டது, சித்ரவதை செய்யப்பட்டது, மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டது, இரண்டு தடவைகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டது என அவர் எதிர்கொண்ட துயரங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இச்செவ்வாயன்று இறந்த 85 வயதாகும் கிம், தென் கொரியாவின் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் போது இருமுறை நாட்டை விட்டு வெளியேறியவர். 1970 களில் இரண்டு தடவைகள் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தவர். 1980ல் இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து தப்பியவர். திருத்தந்தை 2ம் ஜான் பவுல் மற்றும் சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளின் பேரில் 1982ல் விடுதலை செய்யப்பட்டவர். தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவராக 1997ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2003ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். 2000மாம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்றார்








All the contents on this site are copyrighted ©.