2009-08-19 15:37:38

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஆக.19,2009 பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தெல் கண்டோல்போவில் இருந்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று அங்கே திருப்பயணிகளைச் சந்தித்து புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார். ஒவ்வொரு புதனன்றும் பல்வேறு மொழிகளில் தன் போதனைகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பாப்பிறை, இப்புதனன்றும் முதலில் இத்தாலியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வழங்கிய பின் ஆங்கில மொழியில் தொடங்கிய போது முதலில் ஆங்கிலம் பேசும் அனைத்துத் திருப்பயணிகளையும் குறிப்பாக இந்தியா மற்றும் நைஜீரியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி வரவேற்றார்.

RealAudioMP3 இப்புதனன்று திருச்சபை சிறப்பித்த புனித ஜான் யூட்ஸை குறித்ததாய் திருத்தந்தையின் புதன் பொது மறைபோதனை இருந்தது. விசுவாசத்தின் பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கி அவைகளை எதிர்கொள்ள திணறிய காலக்கட்டத்தில் ஆன்மீக உள்ளொளியும் உறுதியும் கொண்ட குறிப்பிடத்தக்க மனிதர்களை உருவாக்கிய 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் இப்புனிதர். மறைமாவட்ட குருக்களுக்கு ஆழமான, உறுதியான உருவாக்கல் பயிற்சியை வழங்குவதற்கென தன்னை அர்ப்பணித்த துறவுசபை ஒன்றை உருவாக்கியதை இப்புனிதரின் முக்கிய பங்களிப்பு என்று கூறலாம். இயேசுவின் குருத்துவ இதயத்தின் வழியாகவும் மரியன்னையின் தாய்க்குரிய இதயம் வழியாகவும் மனித குலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள இறை அன்பில் நம்பிக்கை கொள்ளவும் தூய்மையில் சிறந்து வளரவும் குருத்துவ மாணவர்களுக்கு இப்புனிதர் ஊக்கமளித்தார். இப்புனிதரின் எடுத்துக்காட்டான வாழ்வால் தூண்டப்பட்டு இவ்வுலகில் குருக்களும் குருத்துவ மாணவர்களும் ஆன்மீக முறையில் இயேசுவின் இதயத்திற்குள் புகுந்து மேய்ப்புப்பணி ஆர்வத்திலும் தூய்மையிலும் புதுப்பிக்கப்பட்டு பொறுமை, தாழ்ச்சி, கருணை மற்றும் உண்மை அன்பின் மனிதர்களாக மாற வேண்டுமென இக்குருக்களுக்கான ஆண்டில் சிரப்பான விதத்தில் செபிப்போம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

RealAudioMP3 இந்தத் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமது இறை ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.