2009-08-19 15:33:47

இலங்கையில் புலம் பெயர்ந்துள்ள மக்கள் துரிதமாக மீளக்குடியமர்த்தப்படல், ஒப்புரவுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குதல், அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்தல் ஆகியவற்றுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு கவனம் செலுத்தும்


ஆக.19,2009. இலங்கையில் புலம் பெயர்ந்துள்ள மக்கள் துரிதமாக மீளக்குடியமர்த்தப்படல், ஒப்புரவுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குதல், எவ்வளவு விரைவில் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்தல் ஆகியவற்றுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு கவனம் செலுத்தும் என்று அந்நாட்டின் தெற்காசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, இலங்கை அரசோடு இவை குறித்து உரையாடல் நடத்தி வருவதாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார் பிளேக்.

முகாம்களில் இருப்பவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகை செய்யப்படுவது மிக முக்கியம் என்றும் கூறிய அவர், இலங்கை அரசின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அந்நாட்டுக்கான உதவிகள் அமையும் என்று அறிவித்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து அதில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு கூறி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்கான மேலும் நிதியுதவிகள், இனி அங்கு மக்களை மீளக் குடியமர்த்துவது மற்றும் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கான நகர்வை ஒட்டியே அமையும் என்று மேலும் கூறினார் பிளேக்.

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவது தாமதப்படும் பட்சத்தில் அது தமிழ் சமூகத்தை மேலும் தனிமைப்படுத்துவதுடன் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும் பிளேக் கருத்து தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ச்சியடைந்திருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர் சமூகம் இன்னமும் சக்தியுடன் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.