2009-08-17 14:46:14

அன்னைமரியாளைப் போல நாமும் கடவுளுக்கு ஆகட்டும் என்று சொல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், திருத்தந்தை


ஆக.17,2009. மரியாளுக்கு நேர்ந்தது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுதியானதாக இருக்கும் வேளை, இயேசு தலையாய் இருக்கும் உடலின் உறுப்புகளாக மாறுவதற்கும் திருநற்கருணை வழியாக மரணத்தின் மீது வெற்றி கொள்வதற்கும் அன்னைமரியாளைப் போல நாமும் கடவுளுக்கு ஆகட்டும் என்று சொல்வதற்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவில் பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தின் உள் மற்றும் வெளி வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ நான்காயிரம் திருப்பயணிகளுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, மரியின் விண்ணேற்பு விழாவுக்குப் பின்னர் இந்த மூவேளை செப உரையையும் நம் தாய் மரியா பற்றிய சிந்தனைகளுக்கென அர்ப்பணித்தார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்துப் பேசிய அவர், மரியா, தமது மகன் இறங்கி வந்த இடத்துக்கு ஏறிச் சென்றாள் என்று சொல்லி இது பற்றிச் சிந்திப்போம் எனவும் திருப்பயணிகளிடம் கூறினார்.

கடவுளின் வாழ்வையே கொண்டுள்ள உணவான, உயிருள்ள அப்பமாக இயேசு காட்டப்படுகிறார், அவரை உண்பவர் இதனை எடுத்துரைக்க இயலும் என்ற திருத்தந்தை, இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் என்ற இயேசுவின் திருவாக்கையும் சுட்டிக்காட்டினார்.

இறைமகனாகிய இயேசு மனித உடலை புனித கன்னிமரியிடமிருந்து பெற்றார், அதற்குப் பிரதிபலனாக மரியா தமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் கடவுளால் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார், இது ஒருவகையான பரிமாற்றம், இதில் கடவுளே எப்பொழுதும் முழுமையாக முதல் முயற்சி எடுக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

“கடவுள் இவ்வுலகில் வாழும் பொருட்டு நாம் நமது வாழ்க்கையை அவரது விருப்பம் போல் விட்டுவிட வேண்டுமென்று அவர் நம்மைக் கேட்கிறார்” என்றும் திருத்தந்தை கூறினார்.

மரியாளுக்கு நேர்ந்தது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுதியானதாக இருக்கின்றது, நமது இதயங்கள், உடல்கள், நமது முழு வாழ்வு முழுவதையுமே இறைவனுக்கு உகந்ததாய் அணைக்கும் பொழுது அவர் இவ்வுலகில் குடியிருக்க இயலும் என்றும் அவர் உரைத்தார்.

நித்திய வாழ்வெனும் கொடையை வழங்கும் உயிருள்ள உணவாகிய நம் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை வைக்குமாறும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பயணிகளைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அன்பும் அமைதியும் நிறைந்த இறைவனின் அளப்பரிய ஆசீர்வாதங்கள் அனைவரையும் நிறைப்பதற்குத் தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.