2009-08-15 13:47:09

கிறிஸ்தவ விசுவாசம், இருளான நேரங்களில் தடைபட்டுவிடாமல் இறைவனின் திட்டத்தோடு இணைந்து முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும், திருத்தந்தை


ஆக.15,2009 கிறிஸ்தவ விசுவாசம், கடும் புயலடிக்கும் கடலில் பயணம் செய்வதாக இருந்தாலும் அது இருளான நேரங்களில் தடைபட்டுவிடக் கூடாது, மாறாக இறைவனின் திட்டத்தோடு இணைந்து முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

அன்னைமரியின் விண்ணேற்பு விழாவான இச்சனிக்கிழமை காலை காஸ்தெல் கண்டோல்போ புனித தோமையார் பங்குக் கோவிலில் விழாத் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, வேறு எதுவும் நமது வாழ்க்கையை அடித்துச் சென்றுவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

கபிரியேல் வானதூதர் கன்னிமரியாவுக்கு கிறிஸ்து பிறப்பு செய்தியை அறிவித்தவுடன் அவர் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் சென்ற நிகழ்வை விளக்கிய திருத்தந்தை, அன்னைமரியா, இறைவனில் மட்டுமே நம்பிக்கை வைத்து தனது சொந்த வீட்டை விட்டு புதிய பாதையில் சென்றார் என்றும் கூறினார்.

தூய ஆவியினால் நிரப்பப்பட்ட மரியா, அந்நேரத்திலிருந்து இயேசுவின் மறைந்த வாழ்வு மற்றும் அவரின் சிலுவையடியில் நின்ற பொது வாழ்வு வரை, வாழ்க்கையின் இருளான துன்ப நேரங்களிலும் இறைவனின் திட்டத்தோடு இணைந்து செயல்பட்டார் என்று விளக்கினார் திருத்தந்தை.

இயேசுவைப் பின்செல்வது, உயிர்ப்பில் உண்மையாக்கப்பட்ட மரணம் மற்றும் பாவத்தின் மீது அடைந்த வெற்றியாகும் என்றும் மறையுரையில் குறிப்பிட்ட அவர், புயல் நிறைந்த கடலில் செய்யும் பயணத்தில் வழிகாட்டி விண்மீனாகிய மரியா தம் மகன் இயேசுவின் வழியில் நம்மை நடத்திச் செல்வார் என்றும் கூறினார்.



 








All the contents on this site are copyrighted ©.