2009-08-10 14:36:50

நிலையில்லா உலகில் நிலைப்பது எது?


ஆக.,10, 2009 ஒரு சமயம் ஒரு பண்ணையார் தன்னிடம் வேலை பார்த்த ஓர் ஏழை குடியானவனிடம், தம்பி, ஒரு நாளில் உன்னால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அந்த அளவு நிலத்தை உனக்குத் தர விரும்புகிறேன், ஆனால் ஒரு நிபந்தனை. அது என்னவெனில், நீ எந்த இடத்திலிருந்து நடக்கத் தொடங்குகிறாயோ அதே இடத்திற்கு அன்று சூரியன் மறைவதற்குள் வந்துவிட வேண்டும் என்று சொன்னார். அந்த ஏழை விவசாயியும் இது தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று நினைத்து எவ்வளவு நிலத்தை வளைத்துப் போட முடியுமோ அவ்வளவு நிலத்தைப் பெற வேண்டுமென்று விரும்பினான். அதனால் அதற்கு அடுத்த நாளே அதிகாலையில் விரைவாக நடக்கத் தொடங்கினான். அவனுக்கு மிகுந்த களைப்பாக இருந்தாலும் நிலத்தைப் பெற வேண்டும் என்ற பேராசையில் பிற்பகல் முழுவதும் நடந்தான். நடந்து கொண்டே இருந்தவனுக்கு சூரியன் மறைவதற்குள் தான் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டுமென்ற நினைவு வந்தது. உடனே திரும்பி நடக்கத் தொடங்கினான். சேரவேண்டிய இடம் வெகுதூரமாக இருந்ததால் மூச்சு இறைக்க இறைக்க ஓடினான். மூச்சு வாங்கி இறுதியில் சமாளிக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான். எனினும் ஒருவாறு தொடங்கிய இடத்தை அடைந்தான். பயணக் களைப்பில் அங்கேயே விழுந்தான். அவனது உயிரும் அவனை விட்டுப் பிரிந்தது. அந்த விவசாயி அன்று கதிரவன் மறைவதற்குள் செய்ய நினைத்ததைச் செய்து முடித்தான். ஆனால் அவனுக்குத் தேவைபட்டதோ ஆறடி நிலம்தான்.

பேராசை பெருநஷ்டம் என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றார்கள். இந்த உலகில் பணக்காரனோ ஏழையோ யாராக இருந்தாலும் பேராசை என்ற கொடிய நோயால் தாக்கப்பட்டு விட்டால் இறுதியில் கிடைப்பது ஆறடி நிலம்தான். அதுகூட சிலருக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் விமான விபத்துக்களில் இறப்பவர் சிலரின் உடல்கள் கிடைக்காமலே போய் விடுகின்றன. இன்று நாம் அன்றாட அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களைப் பார்க்கும் போது நிலையில்லாத இந்த வாழ்க்கையில் ஏன் இத்தனை அடிதடிச் சண்டைகள் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தில் ஒரு கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதாக இந்த வாரச் செய்தி. அந்தக் கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் நசரத்பேட்டையிலும் திருநீர்மலையிலும் இருந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட அந்தக் கோவிலை திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவுக்கு வாடகைக்கு விட்டு இலட்சக்கணக்கில் பணத்தை ஈட்டுகின்றனராம். இப்படி பல வகையான ஊழல்கள் இடம் பெறுவதாய் செய்தி வெளியாகியிருக்கிறது. தெய்வத்தைக் கும்பிடுவதற்கென கட்டப்பட்ட கோவில் நிர்வாகத்திலே ஊழல் என்றால் மனிதனின் பணப்பேராசையை எப்படி விவரிப்பது?

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முன்னாள் அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த வாரத்தில் நீதிமன்றம் ஒரு பணக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 'நீதி வென்றது!' என்று பாதிக்கப்பட்டோர் பெருமூச்சு விட்டுள்ளனர். எனினும் இவ்வாறு இடம் பெறும் கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? போட்டியும் பொறாமையும் பேராசையும் சுயநலமும்தானே!. தன்னைவிட இன்னொருவர் புகழ் அடையக் கூடாது, சொத்தைச் சேர்த்துவிடக் கூடாது என்ற பேராசைதானே!. இந்தப் பேராசைக் குணத்திற்குத் திருப்தியே இருக்காது. இது எப்போதும் அதிகமாகவே விரும்பும். ஒரு மனிதனின் தேவையை திருப்திப்படுத்தலாம். ஆனால் பேராசையைத் திருப்திபடுத்தவே முடியாது. இது ஆன்மாவின் புற்று நோய், இது உறவுமுறைகளை அழிக்கின்றது என்று ஷிவ் கெரா என்பவர் சொல்கிறார். பேராசை, தாழ்ந்த சுயகௌரவத்தின் விளைவு. இந்தத் தாழ்ந்த சுயகௌரவம், ஒருவரின் போலிப் பெருமை, பாசாங்கு, வறட்டு கௌரவம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகிறது. மாறாக இதிலிருந்து ஒருவர் வெளிவர விரும்பினால் முதலில் மூன்று கேள்விகளை அவர் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். ஒன்று, நான் பேராசைப்படும் அதனை என்னால் பெற முடியுமா, இரண்டு, உண்மையிலேயே எனக்கு அது அவசியமானதுதானா, மூன்று, நான் அதைப் பெறுவதால் எனக்கு மன அமைதி கிட்டுமா என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். அதே சமயம் சக்திக்குத் தகுந்தவாறு வாழ்ந்து அதில் திருப்தியடையக் கற்றுக் கொண்டால் பேராசையிலிருந்து வெளிவந்து விடலாம்.

இத்தாலி நாட்டிலுள்ள வெசுவியுஸ் எரிமலை உலகில் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை கி.பி. 79ம் ஆண்டில் வெடித்ததில் பொம்பெய், ஹெர்குலானேயும் Herculaneum ஆகிய இரண்டு நகரங்களும் அழிந்தன. 25 ஆயிரம் பேர் வரை இறந்தனர். அந்த நகரங்களின் அப்போதைய நிலைமையை பின்னர் ஆய்வு செய்த போது ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவளது கால்கள் எதையோ எடுப்பதற்கு முயற்சி செய்ததையும் அவளது கையொன்று ஒரு பையின் ஓரத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததையும் கண்டார்கள். அந்தப் பையினுள் முத்துக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மரணம் அவளது வாசலை நெருங்கிய போதும் அந்தப் பெண் முத்தைத் தேடியிருப்பது வியப்பாக இருக்கிறது.

இந்த ஞாயிறன்று நகரப் பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கடவுளின் இருப்புப் பற்றி கேள்வி எழுப்பி இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு சக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துவிட்டதால் பேரூந்து ஓட்டுனர் நிலைமையை சமாளித்தார். அப்போது பேரூந்து திடீரென தூக்கிப் போட்டது. உடனே பலரும், குறிப்பாக கடவுள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அவ்விருவரும் கடவுளே என்றுதான் கத்தினர். ஆனால் வெசுவியுஸ் எரிமலை வெடிப்பில் இறந்த அந்தப் பெண் சாகப் போகும் அந்த நேரத்திலும் முத்தைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறாள்.

அன்பர்களே, பொருளாசையும் பணத்தாசையும் நம்மை முழுமையாக ஆட்கொள்கின்ற போது நமது உயிரையும் இழக்க நேரிடுகிறது. உயிரைவிட மேலானது இல்லை என்ற அறிவை மழுங்கச் செய்யக் கூடிய அளவில் பணம் என்ற மாயை நம்மில் சிலரைக் கவர்ந்து விடுகிறது. உலகப் பொருட்கள் நம் சக்தியை வீணாக்கி, நம் மனஉறுதியைப் பலவீனமாக்குகின்றன. ஆனால் இந்தப் பேராசை பிடித்தவர்கள், பொருளையும் பணத்தையும் பதவியையும் கடவுளாக வணங்குபவர்கள், காசேதான் கடவுளப்பா என்று வாழ்பவர்கள். இவர்களில் உண்மையான கடவுள் பற்று இருக்காது. இவ்வாறு கடவுளை மறந்து வாழ்வோர் மரண முகாம்களைக் கட்டுபவர்கள், இவர்கள் இவ்வுலகில் நரகத்தின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் சாடினார்.

RealAudioMP3 ஹிட்லரின் அரசால் உருவாக்கப்பட்ட நாத்சி சித்ரவதை முகாம்களை, ஒவ்வொரு மரண முகாமையும் போல, தீமையின் உச்சகட்ட அடையாளமாகக் கருதலாம். மனிதன் கடவுளை மறக்கும் போது இவ்வுலகிற்கு வருகின்ற நரகம் அது, மேலும், நன்மை எது? தீமை எது? வாழ்வைக் கொடுப்பதா? வாழ்வை எடுப்பதா? என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமையை கடவுளிடமிருந்து பறித்து எடுக்கும் போது அந்த நரகம் உலகில் நுழைகின்றது. துரதிஷ்டவசமாக இந்த வகையான செயல் அந்த மரண முகாம்களோடு நின்றுவிடவில்லை, எல்லைகளைத் தாண்டியும் பரவியுள்ளது என்றார். இன்று இலங்கையில் தமிழர்கள் முள்கம்பிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைக்கூட அன்றைய நாத்சி முகாம்களோடு ஒப்பிட்டு வந்த ஊடகச் செய்திகளை வாசித்திருக்கிறோம் அல்லவா.

விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ள யோபு என்ற செல்வந்தர் தீயவனின் சக்தியால் தமது வாழ்க்கையில் அனைத்துச் செல்வங்களையும் இழந்தார். ஆனால் அவர் அந்நிலையிலும் ஒருபொழுதும் கடவுளை நிந்தித்தது கிடையாது, அவரைப் புறக்கணித்தும் இல்லை. நிர்வாணியாய் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிர்வாணியாகவே அவரிடம் திரும்ப்ப் போவேன். கடவுள் கொடுத்தார், அவரே எடுத்துக் கொண்டார் என்பதே அவரது வார்த்தைகளாக இருந்தன. யோபுவைப் பலவாறு சோதித்த சாத்தான் அவர் கடவுளை நிந்திப்பார் என்று நினைத்தான். ஆனால் அதில் தோல்வி கண்டான். மீண்டும் சாத்தான் சோதனையில் இறங்கினான். யோபுவின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் புண்களை உண்டாக்கினான். அவர் ஒரு குப்பை மேட்டில் அமர்ந்து கொண்டு சொரிந்து கொண்டே இருந்தார். அதைப் பார்த்த அவரது மனைவி இப்பொழுதாவது கடவுளைப் பழித்துவிட்டு இறந்து போகலாமே என்றாள். அப்போது யோபு, என்ன இது, நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையை மட்டும் பெறலாம், தீமையை மட்டும் பெறக்கூடாதா? என்று கேட்டார். இப்பொழுது தீயவனான சாத்தான் முற்றிலும் தோல்வி கண்டான். அவனின் பேராசை தோற்றது. யோபுவின் கடவுள் ஆசை வென்றது. யோபு முன்னைய நிலையைவிட அனைத்தையும் இரட்டிப்பாகப் பெற்று வாழ கடவுள் அவரை ஆசீர்வதித்தார் என்று வேதம் சொல்கிறது.

செல்வம் சென்று கொண்டே இருக்கும். எனவே ஒருவர் பணத்திலும் பொருளிலும் தம் எண்ணத்தையும் செயல்களையும் பதித்தால் இறுதியில் அது ஆறடி நிலத்தைக்கூட அவருக்குத் தராது. எம் பெருமானே, வாழ்வு அனைத்தும் மயக்கம் எனத் தெரிந்தேன் எனத் தாயுமான சுவாமிகளும் பாடியிருக்கிறார். வாழ்வென்னும் நதியை எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் அதில் நாம் இழுத்துச் செல்லப்படுதல் உறுதி. எனவே அந்த நதியின் படகோட்டியான கடவுளிடம் சரணடைவதுதானே விவேகம். நிலையில்லாத இவ்வுலகில் நிலைப்பது இறைவனின் அருள் ஒன்றே.

 








All the contents on this site are copyrighted ©.