2009-08-08 14:51:01

மடுமாதா திருவிழாவில் சுமார் நான்கு இலட்சம் திருப்பயணிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது


ஆக.08,2009. இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள மடுமாதா திருவிழாவில் இம்முறை சுமார் நான்கு இலட்சம் திருப்பயணிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு பல்சமய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அலெக்சாண்டர் சில்வா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே வன்னிப்பகுதியில் ஏற்பட்டிருந்த போர் காரணமாக தென்பகுதி திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு எளிதாகச் சென்று வர முடியாத நிலைமை ஏற்பட்டிருந்த வேளை தற்சமயம் மடுமாதா திருவிழா விரிவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

இந்த விழா குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரி நிமால் லியுகே, தென்பகுதி்களில் இருந்து வருகின்ற திருப்பயணிகள் மதவாச்சி வீதிசோதனைச்சாவடியில் சோதனையிடப்படமாட்டார்கள், ஆனால் மன்னார் வீதியில் இருந்து மடுக்கோவிலுக்குச் செல்லுகின்ற பாதையில் வைத்தே சோதனையிடப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

400 வருட பழமை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலய விழா ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும், இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் மட்டுமே திருப்பயணிகள் இவ்வாலய சுற்றுப் பகுதியில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் லியுகே தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கென 9 கோடியே 60 இலட்சத்துக்கு அதிகமான ரூபாயை பிரிட்டன் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.