2009-08-08 14:51:23

பூர்வீகஇன மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவற்றைச் செயல்படுத்த ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


ஆக.08,2009 பூர்வீகஇன மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவற்றைச் செயல்படுத்தும் விதம் குறித்து அரசுகளும் சமூகங்களும் பரிசீலிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் விண்ணப்பித்துள்ளார்.

சர்வதேச பூர்வீகஇன மக்கள் தினம் இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், 2007ம் ஆண்டில் ஐ.நா.பொது அவையால் அறிவிக்கப்பட்ட பூர்வீகஇன மக்களின் உரிமைகள் குறித்த அறிக்கை அம்மக்களின் நீதி, சமஉரிமை மற்றும் முன்னேற்றத்திற்கான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார்.

உலகின் எழுபது நாடுகளில் வாழும் ஏறத்தாழ 37 கோடி பூர்வீகஇன மக்கள் இப்பூமியின் பல்வேறு பகுதிகளில் பல உயிரினங்களைக் காத்து வருகிறார்கள் என்றும் அவர்கள் உலகின் பெரும்பாலான மொழிகளைப் பேசுகிறார்கள் என்றும், அவர்களின் பாரம்பரிய அறிவும் கலாச்சார பன்மைத்தன்மையும் உறுதியான வாழ்வு முறையும் உலகின் பொதுப் பாரம்பரியச் சொத்திற்கு மதிப்பிட முடியாத பங்கை அளிக்கின்றன என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகிறது.

பூர்வீகஇன மக்களின் உரிமைகளை அங்கீகரித்திருப்பதற்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே காணப்படும் இடைவெளியை அகற்றி அம்மக்கள் சமுதாயத்தில் முழுவதும் தங்களை ஈடுபடுத்தி வாழ்வதற்கு வழி செய்யப்படுமாறு அவர் உலக நாடுகளைக் கேட்டுள்ளார்.

அம்மக்களின் குடியிருப்புப் பகுதிகள், கனிமவளச் சுரங்கங்கள் மற்றும் காடுகள் அழிவால் அச்சுறுத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர், அவர்களின் நலவாழ்வு, கல்வி, ஏழ்மைநிலை போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுமாறு அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.