2009-08-08 14:50:48

குருக்கள் தங்களையே சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கு குருக்கள் ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைகின்றது, அகர்த்தலா ஆயர்


ஆக.08,2009 குருக்கள் தங்களையே சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கு இந்த சர்வதேச குருக்கள் ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்று வடகிழக்கு இந்தியாவின் அகர்த்தலா மறைமாவட்ட ஆயர் லூமென் மொன்த்தெய்ரோ கூறினார்.

பங்குக் குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னி விழாவன்று தனது மறைமாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இக்குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஆயர் மொன்த்தெய்ரோ, இம்மறைமாவட்ட குருக்கள் இவ்வாண்டில் மகிழ்ச்சியுடனும், தூய்மையுடனும், அதிக பிரமாணிக்கத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்வார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

திருச்சபையின் வாழ்விலும் மறைப்பணியிலும் குருக்களின் தூய்மையான வாழ்வுக்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கூற்றையும் நினைவுபடுத்திய அவர், அகர்த்தலா மறைமாவட்டத்தில் ஆர்வமுடன் மறைப்பணியாற்றிய பல குருக்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அடிப்படை வசதிகளின்றி உள்ளூர் மொழிகளைக் கற்று இறைவார்த்தையை ஆர்வமுடன் போதித்த குருக்களின் மாதிரிகையைப் பின்பற்றி வாழுமாறு அம்மறைமாவட்ட குருக்களை வலியுறுத்தினார் ஆயர் மொன்த்தெய்ரோ.








All the contents on this site are copyrighted ©.