2009-08-07 13:56:16

இலங்கையில் உண்மையான அமைதியையும் ஒப்புரவையும் அனைவரும் சேர்ந்து கட்டி எழுப்புமாறு பேராயர் ரஞ்சித் அழைப்பு


ஆக.07,2009. இலங்கையில் உண்மையான அமைதியையும் ஒப்புரவையும் அனைவரும் சேர்ந்து கட்டி எழுப்புமாறு கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராகப் பொறுப்பேற்ற நிகழ்வில் கூறினார் பேராயர் மால்கம் ரஞ்சித்.

இப்புதனன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட கத்தோலிக்கர் புத்த மதத்தினர், இந்துக்கள், சில அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு சிங்களம் மற்றும் தமிழில் உரையாற்றிய பேராயர் ரஞ்சித் இவ்வாறு அழைப்புவிடுத்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்குப் பணிவு, உண்மை, மேய்ப்புப்பணி, ஆழமான நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்குத் தான் நன்றிசொல்ல விரும்புவதாகத் தெரிவித்த பேராயர், திருத்தந்தைக்கும் கொழும்பு உயர்மறைமாவட்டத்துக்கும் இடையேயான இந்தப் பிணைப்பு அகிலத் திருச்சபையின் மகிழ்வுக்காக மேலும் வளர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.

இலங்கை நாடு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இனப்பாகுபாடு, குறுகிய மனப்பான்மை, பிளவுகள்ஆகிய தீமைகளின் விளைவுகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உரைத்த அவர், நீதியும் சுதந்திரமும் ஜனநாயகமும் நிறைந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு திருச்சபை, அரசுத்தலைவர், அரசியல் தலைவர்கள் சமயத் தலைவர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றது என்றும் கூறினார்.

62 வயதாகும் பேராயர் மால்கம் ரஞ்சித் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக கடந்த ஜூனில் நியமிக்கப்பட்டார்.

 








All the contents on this site are copyrighted ©.