2009-08-07 13:56:02

அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர், உலகப் போக்கு நிறைந்த சமுதாயத்திலிருந்து எதிர்ப்புக்களை எதிர்நோக்க நேரிடும், கர்தினால் லெவாடா


ஆக.07,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர், உலகப் போக்கு நிறைந்த சமுதாயத்திலிருந்து எதிர்ப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்று திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா எச்சரித்தார்.

நைட்ஸ் ஆப் கொலம்பஸ் என்ற பொதுநிலை கத்தோலிக்க பக்த இயக்கத்தினரின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் லெவாடா, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதில் அன்னைமரியை மாதிரிகையாய்க் கொள்ளுமாறு கூறினார்.

அமெரிக்கக் கத்தோலிக்கர் கிறிஸ்துவுக்கு விசுவாசமாய் இருந்தால் அன்னைமரியைப் போல அவர்களும் எதிர்ப்பு வாளால் குத்தப்படுவர் என்று அவர் எச்சரித்தார்.

மற்றவரின் வாழ்வை உயர்த்துவதற்கு, சமய வேறுபாடு பார்க்காமல் நன்மனம் கொண்ட அனைவரோடும் சேர்ந்து செயல்படுமாறும் அமெரிக்கக் கத்தோலிக்கரைக் கேட்டுக் கொண்டார் கர்தினால் லெவாடா.

உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க சகோதரத்துவ தொண்டு நிறுவனமான நைட்ஸ் ஆப் கொலம்பஸ் 1882ல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொடங்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பசின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இதில் 17 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கத்தோலிக்க விசுவாசத்தை உண்மையிலே வாழும் பதினெட்டும் அதற்கு மேற்பட்ட வயதினரும் இதில் உறுப்பினராகச் சேரலாம். இதன் 14 ஆயிரம் அவைகள் அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, கரீபியன் நாடுகள், மத்திய அமெரிக்கா, பிலிப்பீன்ஸ், குவாம், சாய்பன், ஜப்பான், கியூபா, போலந்து போன்ற நாடுகளில் இயங்குகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் 110 கோடி டாலரைப் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கியுள்ளது இந்த நைட்ஸ் ஆப் கொலம்பஸ் அமைப்பு.

 








All the contents on this site are copyrighted ©.