2009-08-06 20:30:57

விவிலியத் தேடல் நிகழ்ச்சி காணாமற்போன ஆடு பற்றிய உவமை . தூய லூக்கா 15 . 1-7


இதே உவமையை தூய மத்தேயுவும் அவரது நற்செய்தியில் அதிகாரம் 18. 12-14 திருவசனங்களில் தருகிறார்.



குடியானவர் வயல்வழியே வந்தார். ஒரு ஆட்டைக் காணோம் என்றார். நகரத்திலிருந்து வந்திருந்த நண்பர் எப்படி ஆடு காணாமல் போகும் எனக் கேட்டார் . அவை புல்லை மேய்ந்துகொண்டே செல்லும்போது காணாமற்போய்விடுகின்றன என்றார் ஆட்டுக்குச் சொந்தக்காரர் . அவை குனிந்து கொண்டே மேய்கின்றன .ஒரு புல்திட்டிலிருந்து மற்றொண்டுக்குச் செல்கின்றன . வழியில் திசைமாறி மற்ற ஆடுகளிலிருந்து பிரிந்து வேலியிலிருக்கும் ஓட்டைவழியாக வெளியேறிவிடுகின்றன. ஆனால் பின்னர் அதே வெளியேறிய வழியைத்தெரியாது வேலிக்கு வெளியேயே தவிக்கின்றன என விளக்கம் அளித்தார் இடையர் .

தூய லூக்கா இந்த நற்செய்தியை பரிசேயர் சதுசேயர் என்ற யூதகுல மதவாதிகளுக்கு இயேசு கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார் . இயேசு பாவிகள் , வரிதண்டுவோர் ஆகியோரை வெறுத்து ஒதுக்கிய மதவாதிகளுக்கு எதிராக இரக்கத்தை வலியுறுத்தி இந்த உவமையைக் கூறியிருக்கிறார் . மதவாதிகள் தவறுசெய்வோர் கடவுளின் அன்புக்கு அப்பாற்பட்டவர்கள் எனத் தீர்ப்பிட்டார்கள் . மன்னிப்புப்பெறுவதைப்பற்றியும் கடவுளிடம் திரும்பி வருவதைப் பற்றியும் யூத மதநூல்களில் எழுதப்பட்டுள்ளது . ஆனால் பாவிகளைத் தேடி அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது பற்றி ஏதும் எழுதப்படவில்லை . இயேசு பாவிகளைத் தேடிச்செல்வதாகத் தெரிவிப்பது புதுச் சிந்தனையும் மிகமுக்கியமானதுமாகும் . காணாமற்போன ஆட்டைத் தேடி ஆயன் செல்வதும் , தேடிக் கண்டுபிடிப்பதும் , கண்டுபிடித்ததும் மகிழ்ந்து தம் தோளில் போட்டுக்கொண்டு திரும்புவதும் உலக சமய வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும் புதிய சித்தாந்தத்தையும் கொண்டுவந்துள்ளது.

பாலஸ்தீனத்தில் அக்காலத்தில் நூறு ஆடுகள் என்பது ஒரு பெரிய மந்தையாகும் . ஒரு ஆடு காணாமல் போனாலும் அது ஒரு பெரிய இழப்பாகும் . பயிர் செய்யப்படாத காட்டுப் புல்வெளியில் ஆடுகள் மேய்வதாகத் தெரிவிக்கிறார் தூய லூக்கா.

காணாமற்போய்விட்டது என்ற வரிகளையே இயேசு பயன்படுத்தியிருக்கிறார் .பாவிகள் என்ற அடைமொழியை அல்ல.

நரகத்துக்குப் போகக்கூடிய கைவிடப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கவில்லை இயேசு . மனிதன் தொடக்கத்தில் பொறுப்புள்ளவனாகத்தான் படைக்கப்படுகிறான் . ஆனால் பாவச்சேற்றில் வீழ்ந்துவிடுகிறான் என்ற அர்த்தமும் காணாமற்போகும் கதையில் மறைந்துள்ளதை நாம் உணரலாம். காணாமற்போய்விட்டது என்பது அந்த ஆட்டின் பரிதாப நிலையையும் ஆயரின் பரிவையும் தெளிவாக்குகிறது. ஆடுகளைப்போலவே மனிதரும் குனிந்த பார்வையைக் கொண்டவராக இப்படியும் அப்படியும் வாழ நினைத்து வழிதவறிப்போய்விடுகிறார்கள். ஆயரது நல்ல பாதையை விடுத்துத் தான் தோன்றித்தனமாகப் போய்விடுகிறார்கள் . மனிதர்களுக்கு ஆடுகளைவிட நல்லறிவு உள்ளது . ஆனால் மனிதர்கள் நல்லோரது பாதையில் நடக்கவேண்டும் . நல்ல ஆயர்களைப் பின் தொடரவேண்டும் . ஒருவேளை மனிதன் காலத்திலும் இடத்திலும் நிரந்தரமில்லாது வாழ்கிறான். புயலும் வெள்ளமும் தாக்கினால் ஒழிய அவனுக்கு தன் சுற்றத்தோடு இருக்கும் மகிழ்ச்சி புலப்படுவதில்லை .



காணாமற்போன ஆட்டை ஆயர் தேடிச் செல்வதாகக் காண்கிறோம் . கடவுளின் பேரன்பு நம்மைத் தேடிக்கொண்டே இருக்கிறது . மனிதன் ஆயன் குரல் கேட்டபிறகே கடவுளை நினைக்கிறான் . ஆனால் கடவுள் மனிதனைத் தேடிக்கொண்டே இருக்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. மக்கள் கடவுளை மறந்தே வாழ்கின்றனர் . தத்தமது தொழிலிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். கடவுள் குரலொலிக்கு செவிடராக இருக்கிறார்கள் . கடவுள் குரலைக்கேட்டும் கேளாது வாழ்ந்துவருகிறார்கள் . ஆனால் மனிதரின் மனச்சான்றுகள் வேறு ஒரு கதையையும் கூறுகின்றன . என்ன கதை - கடவுள் தேடி வரும் காலடி ஓசையைக் கேட்கிறது மனச்சான்று . கடவுளின் நிழல் தம்மீது விழுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள் . மனிதர்களும் காணாமற்போன ஒருவரைத் தேடிக்கண்டு பிடிக்கும்வரை அயர்வதில்லை. நாடே தேடுவதையும் நாம் காண்பதில்லையா . அது நமது ஈர நெஞ்சத்தைக் காட்டுகிறது. இயேசு மனிதரை மீட்பதற்காகவே மனு உரு எடுத்தவர். அவரை நாம் மறக்கமுடியாது . அவர் நம்மை எந்நாளும் பின் தொடர்ந்து வருகிறார். யாரும் அந்த வரலாற்று நாயகனை மறைவிலிருந்து வெளி உலகுக்குக் கொண்டுவர முயலவில்லை . மாறாக அவரை சிலுவையில் ஏற்றி அவமானத்தோடு அழித்துவிட்டு கல்லறையில் உறங்கவைக்க முயன்றார்கள். கடவுள் அவரை உயிர்தெழச் செய்தார் . அவர் இவ்வுலகின் காடுகளில் நடந்து பயணமாகிக் கொண்டே இருக்கிறார். நம்மைத் தேடிக் கொண்டே இருக்கிறார் .



காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை அதைத் தேடிச்செல்லமாட்டாரா என்ற வரிகள் நமக்கு என்ன தெரிவிக்கின்றன . சலைப்பும் களைப்பும் இல்லாது விடாது கடவுள் மனிதரைத் தேடிக்கொண்டே இருக்கிறார். தாம் மீட்புப் பெற்றுவிட்டோம் என எண்ணுபவர்கள் , தாங்கள் நீதிமான்கள் என எண்ணுபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . கடவுள் தேடிக்கொண்டே இருக்கிறார் . மனிதர்கள் கடவுள் நம்மைத் தேடிக்கொண்டே இருக்கிறார் என்பதில் ஆறுதல் அடையலாம். ஆம் அவர் நமக்காகக் கல்வாரிச் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் .

இந்தக் கதை மகிழ்ச்சிப் பெருக்கோடு முடிகிறது. உலகம் மீட்புப் பெறுவதை வானதூதர் குழு மகிழ்ச்சியோடு குனிந்து நோக்குகிறது. மனிதன் வெற்றிபெறும்போதோ தன்னுடைய நோயை நீக்குமாறு செபிக்கும்போதோ வானவர் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்குவதில்லை. ஆனால் வானவர்கள் ஆடொன்று காணாமல் போகும்போது கவலையோடு நோக்குவதும் ஆயர் அதனை விடாது தேடிச்சென்று கண்டுபிடிப்பதையும் காணும்போது பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். அந்த மனிதன் தன் குற்றத்துக்காக வருந்துகிறான் . மனஸ்தாபப்படுகிறான். தற்போது இயேசுவை நினைக்கிறான். தன் தலையை நிமிர்த்தி கடவுளிடம் வருகிறான் . அவனை ஆயர் இயேசு மீட்டுவிட்டார் .ஓ வானகத்திலே மகிழ்ச்சிப்பெருக்கில் மணிகள் எல்லாம் முழங்குகின்றன .

இயேசு தம் சிலுவை என்ற ஆயரின் கோலோடு தன் ஆட்டைத் தேடிவருகிறார். அவர் காணாமற்போன ஆட்டை வெறுப்பதில்லை. அழுக்கு நிறைந்த குட்டையிலிருந்து அந்த ஆடு தண்ணீர் குடிக்கும்போது , நீ தாகமாக இருக்கிறாய் . இதோ இந்த புது நீர்ச்சுனையிலிருந்து நீரைப் பருகு என அவர் அழைத்துச் செல்கிறார். நாம் அவரைவிட்டு விலகி களைப்புற்றிருக்கும்போது அவர் நம்மைத் தம் அன்பெனும் தோள்களில் சுமந்து செல்கிறார். இந்தச் சில வரிகளில் இயேசு வானத்தையும் பூமியையும் பற்றிய கதையை சுருக்கமாகவும் சுவைப் பெருக்கமாகவும் சொல்வது மிகவும் அற்புதமானது .

 








All the contents on this site are copyrighted ©.