2009-08-05 15:00:16

நேபாளத்தில் பல கத்தோலிக்கக் குருக்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்ற கடும் அச்சுறுத்தல்களைப் பெற்று வருகின்றனர்


ஆக.05,2009 நேபாளத்தில் பல கத்தோலிக்கக் குருக்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்ற கடும் அச்சுறுத்தல்களைப் பெற்று வருகின்றனர் என்று கோதாவரி வியான்னி மேய்ப்புப்பணி மைய இயக்குனர் அருள்திரு பயஸ் பெருமானா கூறினார்.

இந்து தீவிரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டு தொலைபேசி வழியாக இந்த அச்சுறுத்தல்களை இவர்கள் தெரிவிப்பதாக ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய அருள்திரு பயஸ், கடும் விளைவுகளைத் தவிர்க்க விரும்பினால் இன்னும் ஒரு மாதத்துக்குள் நேபாளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று தனக்கும் அச்சுறுத்தல் வந்ததாகக் கூறினார்.

அவர்கள் பணத்தைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டார்கள் என்று தான் கருதுவதாகக் கூறிய அக்குரு, இந்தத் தொலைபேசிகள் பற்றி அரசுக்குப் புகார் கொடுத்திருந்தும் இதுவரை தங்களது மேய்ப்புப்பணி மையத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றார்.

தொலைபேசியில் தன்னை அச்சுறுத்திய அந்த ஆள், ஆர்.கே. மைனாலி என்பவரால் தலைமை தாங்கி நடத்தப்படும் ஓர் இந்து தீவிரவாத குழுவாகிய நேபாள பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியதாகவும் அக்குரு தெரிவித்தார்.

கடந்த மே 23ம் தேதி காட்மண்ட் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் குண்டு வைத்தது மற்றும் அருள்திரு ஜான் பிரகாஷ் கொல்லப்பட்டதில் ஆர்.கே. மைனாலி என்பவருக்கு பங்கு உண்டு என சந்தேகிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.