2009-08-03 14:00:47

குருக்கள் ஆண்டு, திருச்சபையிலும் உலகிலும் குருக்களின் பணியின் மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு, திருத்தந்தை


ஆக.03,2009 குருக்கள் ஆண்டு, திருச்சபையிலும் உலகிலும் குருக்களின் பணியின் முக்கியத்துவத்தை ஆழப்படுத்துவதற்கு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகையிலிருந்து ஞாயிறு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, புனிதர்கள் அல்போன்சுஸ் லிகோரி, பிரான்சிஸ் அசிசி, மரிய வியான்னி அருளப்பர், தியென் கயத்தான், இன்னும் 31 ஆண்டுகளுக்கு முன்னர் காஸ்தெல் கண்டோல்போவில் இறந்த பாப்பிறை ஆறாம் பவுல் ஆகியோரை குருக்களின் நல்ல மாதிரிகையாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

சனிக்கிழமையன்று நினைவுகூரப்பட்ட புனித அல்போன்சுஸ் மரிய லிகோரி, ஆயரும் திருச்சபையின் மறைவல்லுனரும் ஆவார், நன்னெறி இறையியலின் மாபெரும் ஆசிரியரும் புண்ணியம் மற்றும் கிறிஸ்தவ மேய்ப்புப்பணி அர்ப்பணத்தின் மாதிரிகையுமான இவர், தம் மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் கவனமுடன் இருந்தார் என்று கூறினார் திருத்தந்தை.

புனித பிரான்சிஸ் அசிசியாரில் வெளிப்பட்ட ஆன்மாக்களின் மீட்புக்கானத் தணியாத் தாகம் பற்றி இஞ்ஞாயிறன்று தியானிக்கின்றோம், இந்த இவரது பண்பை ஒவ்வொரு குருவும் தொடர்ந்து பின்பற்றுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

புனித பிரான்சிஸ் அசிசியார் போர்சியுன்கோலா ஆலயத்தில் செபம் செய்து கொண்டிருந்த போது கண்ட காட்சிக்குப் பின்னர் 1216ம் ஆண்டில் பாப்பிறை மூன்றாம் ஒனேரியசுடமிருந்து பெற்ற 'அசிசியின் மன்னிப்பு' என்பதை நினைவுகூருகின்றோம், இயேசுவின் வலது பக்கத்தில் அன்னைமரியும் அவரைச் சுற்றிப் பல வானதூதர்களும் புடைசூழ பிரான்சிஸ் அசிசியாருக்குக் காட்சி கொடுத்த இயேசு அவரின் விண்ணப்பம் என்னவென்று கேட்டார். அப்போது பிரான்சிஸ், மனம் வருந்தி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று அந்த ஆலயத்தைத் தரிசிக்கும் அனைவருக்கும் மிகத்தாராளமாகவும் பரந்த அளவில் மன்னிப்பு அருளப்பட வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார். இந்த மன்னிப்பிற்கான பாப்பிறையின் ஒப்புதலைப் பெற்றவுடன் இந்தப் புனிதர் எழுத்துவடிவ அறிக்கைக்காகக் காத்திராமல் உடனே அசிசிக்கு விரைந்து போர்சியுன்கோலா சென்று எனதருமைச் சகோதரரே, நான் ஒவ்வொருவரையும் வானகத்திற்கு அனுப்ப விரும்புகிறேன் என்ற நற்செய்தியை அறிவித்தார். அந்நாளிலிருந்து ஆகஸ்ட் முதல் தேதி மதியத்திலிருந்து 2ம் தேதி நள்ளிரவு வரை வழக்கமான விதிமுறைகளுடன் ஒரு பிரான்சிஸ்கன் ஆலயத்தை அல்லது பங்கைத் தரிசிப்பவர்களுக்குப் பரிபூரண பலன் வழங்கப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

மேலும், இவ்வாண்டில் குருக்களுக்கு முன்மாதிரிகையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆர்ஸ் நகர புனித மரிய வியான்னி அருளப்பர் பற்றியும் பேசிய திருத்தந்தை, ஆகஸ்ட் 4ம் தேதி நாம் நினைவுகூரும் இப்புனிதர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு சர்வதேச குருக்கள் ஆண்டை தான் அறிவித்ததையும் குறிப்பிட்டார்.

குருத்துவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டான இந்த அடக்கமான பங்குக் குரு, பங்குக் குருக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து குருக்களுக்கும் எடுத்துக்காட்டு, புதன் பொது மறை போதகத்தில் இவரைப் பற்றிப் பேச நினைத்திருப்பதாகத் தெரிவித்தார் பாப்பிறை.



ஆகஸ்ட் 7ம் தேதி புனித தியெனின் கயத்தான் விழாவைச் சிறப்பிக்கிறோம், உணர்ச்சிப்பூர்வமான அன்பினால் அல்ல, மாறாக உண்மையான அன்பின் மூலம் ஆன்மாக்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன என்று இவர் அடிக்கடி சொல்வதுண்டு என்றும் இப்புனிதர் பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆகஸ்ட் 8ம் தேதி திருச்சபை நினைவுகூரும் புனித தொமினிக், கடவுளிடம் செபிப்பதற்கு அல்லது பேசுவதற்கு மட்டும் தமது வாயைத் திறந்தார் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் சொல்கின்றன என்ற அவர், பாப்பிறை மொந்தினி என்ற பாப்பிறை ஆறாம் பவுல் என்ற மாபெரும் மனிதரை தன்னால் மறக்க முடியாது என்றார்.

பாப்பிறை ஆறாம் பவுல் காஸ்தெல் கண்டோல்போவில் இறந்ததன் 31ம் ஆண்டை ஆகஸ்ட் 6ம் தேதி நினைவுகூருகிறோம், இவர் மனிதத்திலும் குருத்துவத்திலும் மிகவும் சிறப்பான பண்பு கொண்டவர், திருச்சபைக்குக் கொடையாகவும் இருக்கிறார், இவரை நினைத்து இறைவனுக்கு நன்றிகூர வேண்டும் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குருத்துவத் தூய்மையின் எடுத்துக்காட்டுக்களான இப்புனிதர்களைப் பின்பற்றி அனைத்து குருக்களுக்கும் கிறிஸ்துவில் நிறையன்புடன் வாழ திருச்சபையின் தாயாம் புனித கன்னிமரி உதவுவாளாக என்று இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.












All the contents on this site are copyrighted ©.