2009-08-01 14:49:01

பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் அக்குய்னோ இறப்புக்குத் திருத்தந்தை அனுதாபம்


ஆக.,01,2009. பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் கோரசோன் அக்குய்னோ இறந்ததை முன்னிட்டு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மனிலா பேராயர் கர்தினால் கவ்தென்சியோ ரோசாலெசுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், அக்குய்னோவின் குடும்பத்திற்கும், பிலிப்பீன்ஸ் அரசு அதிகாரிகளுக்கும் திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும் அக்குய்னோவின் ஆன்மா நிறைசாந்தியை அடையவதற்கான அவரின் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் மக்களின் சுதந்திரத்திற்காக அக்குய்னோ தன்னைத் தைரியமுடன் அர்ப்பணித்தது, வன்முறையையும் சகிப்பற்றதன்மையையும் அவர் உறுதியுடன் புறக்கணித்தது, நீதியும் நல்லிணக்கமும் கொண்ட அரசியல் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுத்தது என அவரின் குணங்களையும் திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

பெருங்குடல் புற்று நோயால் துன்புற்ற 76 வயதாகும் அக்குய்னோ இச்சனிக்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்தார்.

ஆசியாவின் முதன் பெண் அரசுத் தலைவர் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமுமான பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் அக்குய்னோ, 1986ம் ஆண்டில், மக்கள் சக்தி புரட்சியின் மூலம் பெர்டினான்ட் மார்க்கோஸின் இருபது வருட சர்வாதிகாரி ஆட்சியை வீழ்த்தியவர்.

இவரின் இறப்பை முன்னிட்டு பத்துநாள் துக்கத்தை அறிவித்த தற்போதைய பிலிப்பீன்சிஸ் அரசுத்தலைவர் குளோரியா அரோயோ, நாட்டின் சொத்தை இழந்துள்ளோம் என்று அக்குய்னோவைப் புகழ்ந்துள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.