2009-08-01 14:50:57

தென்னாப்ரிக்காவில் இடம் பெறும் வறுமைக்கு எதிரான வன்முறை போராட்டங்கள், அந்நாட்டில் பொதுநலச் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் உடனடி தேவைகளைச் சுட்டிக் காட்டுகின்றன


ஆக.,01,2009. தென்னாப்ரிக்காவில் இடம் பெறும் வறுமைக்கு எதிரான வன்முறை போராட்டங்கள், அந்நாட்டில் பொதுநலச் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் உடனடி தேவைகளைச் சுட்டிக் காட்டுகின்றன என்று அந்நாட்டு கத்தோலிக்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

ஜொகான்னஸ்பர்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை பாதியில் தொடங்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள், தண்ணீர், மின்சாரம், குடியிருப்பு வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் குறைவுபடுவதால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடே என்று தென் பிராந்திய ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் அருள்திரு மைக் தீப் கூறினார்.

இப்போராட்டங்களில், கட்டிடங்களுக்குத் தீ வைத்தது, வாகனங்கள் மீது கல்லெறிந்தது மற்றும் கடைகளைச் சூறையாடியதற்காக சுமார் 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

தென்னாப்ரிக்காவில் நிறவெறிக் கோட்பாடு முடிவுக்கு வந்த கடந்த 15 ஆண்டுகளில் அரசு 28 இலட்சம் வீடுகளைக் கட்டியுள்ளது, குடிநீர் மற்றும் மின்சார வசதிகளையும் விருத்தி செய்துள்ளது. எனினும் இன்னும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி உள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

பொருளாதார நெருக்கடியினால் இவ்வாண்டில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வேலையிழந்துள்ளனர் என்று அரசு அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.