2009-07-31 15:09:55

நைஜீரியாவில் பொருளாதார மற்றும் சமூகநலம் சீர்படுத்தப்படுவதற்கு, வெறுப்பும் சமய அடிப்படைவாதமும் இல்லாத ஒரு துவக்கமே இன்றியமையாதவை, ஆயர் பேரவையின் உதவிச் செயலர்


ஜூலை31,2009 மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பொருளாதார மற்றும் சமூகநலம் சீர்படுத்தப்படுவதற்கு, வெறுப்பும் எல்லாவிதமான சமய அடிப்படைவாதமும் இல்லாத ஒரு துவக்கமே இன்றியமையாதவை என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவிச் செயலர் அருள்திரு லூயிஸ் ஒடுடு கூறினார்.

ஆப்பிரிக்காவில் எண்ணெய் வளம் மிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக கலவரங்கள் இடம் பெற்று வரும்வேளை, எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதில் ஆர்வம் மற்றும் ஒருவர் ஒருவர் மீதான மதிப்பின் மீது வேரூன்றப்பட்ட வளர்ச்சிக்குச் சமயத் தலைவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக இருந்து தங்கள் பங்கை நாட்டிற்கு வழங்க வேண்டும் என்றார்.

மனிதர் வாழ்வு பெறும் பொருட்டும் அதை மிகுதியாகப் பெறும் பொருட்டும் உலகிற்கு வந்த கிறிஸ்துவின் போதனைகள்ப் பின்பற்றி நடக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வடக்கே பௌச்சி மாவட்டத்தில் இடம் பெற்ற ஓர் இறுதி ஊர்வலத்தின் போது, போக்கோ ஹராம் எனும் கடும் போக்கு இஸ்லாமியவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இடம் பெறும் கலவரங்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். வடபகுதியில் சுமார் நான்காயிரம் பேர் வரை இடம் பெயர்ந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடபகுதியில் பெருமளவில் முஸ்லிம்களும் தென்பகுதியில் கிறித்தவர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.

நைஜீரியாவில் வளங்கள் அதிகமாக இருந்தாலும், வேலை வாய்ப்பு இல்லாமையும், வறுமையுமே மக்களை போராட்ட வழிகளுக்கு இட்டுச் செல்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.