2009-07-31 15:08:16

தேவை ஏற்படின் மற்றுமொரு விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்வதற்குத் திருச்சபை தயங்காது, திருச்சூர் பேராயர்


ஜூலை31,2009. தேவை ஏற்படின் மற்றுமொரு விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்வதற்குத் திருச்சபை தயங்காது என்று கேரளாவின் திருச்சூர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் கூறினார்.

கேரளாவில் 1959ம் ஆண்டில் திருச்சூர் உயர்மறைமாவட்டத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் அம்மாநிலத்தின் முதல் கம்யூனிச அரசு வீழ்ந்தது. அதன் நினைவாக நடைபெற்ற கொண்டாட்டங்களில் உரையாற்றிய பேராயர் தழத் இவ்வாறு கூறினார்.

1959ல் கேரளாவை ஆட்சி செய்த கம்யூனிச அரசு, சிறுபான்மையினரின் உரிமைகளைக் கடுமையாய் மீறி சட்டம் ஒழுங்குகள் எதுவுமின்றி ஜனநாயகப் பாதையினின்று விலகிச் சென்றதால் அச்சமயத்தில் கம்யூனிச ஆட்சியின் தீமையான பிடியினின்று விடுதலை பெறுவது காலத்தின் கட்டாயமாக இருந்தது என்றும் அவர் பேசினார்.

அவ்விடுதலைப் போராட்டத்தில் 1959ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒல்லூர் புனித அந்தோணியார் ஆலயம் தீப்பற்றி எறிந்ததையடுத்து அவ்வாலய வளாகத்தில் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

அச்சமயத்தில் நடைபெற்ற 50 நாள் விடுதலைப் போராட்டத்தில் காவல்துறை நான்கு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக 1959ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி அங்கமலெயி்ல் 7 கத்தோலிக்கர் கொல்லப்பட்டனர்.

மேலும், அச்சமயத்தில் காவல்துறை 248 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 1937 பேர் காயமடைந்தனர் மற்றும் ஐம்பதாயிரம் இளம் பெண்கள் உட்பட 17 இலட்சத்து 80 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்று கேரள ஆயர் பேரவை செயலர் கூறினார்..

 








All the contents on this site are copyrighted ©.