2009-07-31 15:09:04

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஒன்பதாவது நிறையமர்வு கூட்டம், மறைப்பணியின் திருநற்கருணை கூறு மற்றும்பிற மதங்களுடனான உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், கர்தினால் அரின்சே


ஜூலை31,2009. வருகிற ஆகஸ்ட் 10 முதல் 16 வரை மனிலாவில் நடைபெறவிருக்கின்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஒன்பதாவது நிறையமர்வு கூட்டம், மறைப்பணியின் திருநற்கருணை கூறு மற்றும்பிற மதங்களுடனான உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார் கர்தினால் பிரான்சிஸ் அரின்சே.

திருத்தந்தையின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கர்தினால் அரின்சே, ஆசியாவில் கத்தோலிக்கத் திருச்சபை வாழ்வில் இடம் பெறும் இந்த முக்கியமான நிகழ்வைத் தான் மிகுந்த மகிழ்வோடும் பெரும் நம்பிக்கையோடும் எதிர் நோக்குவதாகத் தெரிவித்தார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவராகப் பணியாற்றிய அந்த ஏறத்தாழ 19 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் குறைந்தது நான்கு தடவைகளும் இந்தோநேசியா, தென் கொரியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு குறைந்தது இரண்டு தடவைகளும், இன்னும் பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற மற்ற ஆசிய நாடுகளுக்கும் தான் சென்றிருப்பதையும் கர்தினால் அரின்சே குறிப்பிட்டார்.

நைஜீரியாவைச் சேர்ந்த கர்தினால் பிரான்சிஸ் அரின்சே ஆகஸ்ட் 6ம் தேதி மனிலாவுக்குப் புறப்படுகிறார்.

மேலும், இக்கூட்டம் பற்றிப் பேசிய ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிலிப்பீன்ஸ் பேராயர் ஒர்லாண்டோ கெவேதோ, ஆசிய ஆயர்கள் அன்பும் சேவையும் பகிர்ந்து கொள்ளும் பண்பும் நிறைந்த திருச்சபையைக் கட்டி எழுப்ப விரும்புகிறார்கள் என்றார்.

இக்கூட்டத்தில் சுமார் 120 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

எப் எ பி சி என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் தன்னார்வ அமைப்பாகும். இது ஆசிய திருச்சபையின் உறுப்பினர்கள் மத்தியில் தோழமையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 








All the contents on this site are copyrighted ©.