2009-07-29 18:54:44

விவிலியத் தேடல்.திராட்சைத் தோட்ட வேலையாளர்கள் உவமை . 290709.


காலையில் சரியான நேரத்துக்கு வந்து திராட்சைத் தோட்டத்தில் தங்கள் வேலைகளைத் தொடங்கி மாலையில் தங்கள் பணிகளை உரிய நேரத்தில் ஒரு குழுவினர் முடிக்கின்றார்கள் . அவர்களிடம் தோட்டத்து முதலாளி ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்பதைப் பேசிக் கொண்டார் . வைத்துக்கொள்வோமே நூற்றைம்பது ரூபாய் சம்பளம் என நாள்கூலி பேசிக்கொண்டார் .

தோட்டத்து உரிமையாளரால் சில மணிநேரம் காலதாமதத்துக்குப் பிறகு வேறு சிலர் பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் . இன்னும் சிலர் பணி முடியப்போகும் நேரத்திலும் சிலர் வந்து சேர்ந்து கொள்கிறார்கள் .



மாலையில் பணி முடிகிறது . அன்றாடம் ஊதியம் வழங்கும் முறைப்படி எல்லோரும் அழைக்கப்பட்டு சம்பளத்தைப் பட்டுவாடாச் செய்யப்படுகிறார்கள் . அப்பொழுது கடைசியில் வந்தவர்களுக்கும் முதலில் வந்த மற்றவர்களுக்கும் ஒரு நாள் ஊதியமாகிய நூற்றைம்பது ரூபாயை கொடுக்குமாறு முதலாளி கணக்கரிடம் கூறுகிறார் .தோட்டத்துக் கணக்கப்பிள்ளை அவ்வாறே வழங்குகிறார். காலையில் முதலாவதாக வந்தவர்களுக்கும் அதாவது கடைசியில் வந்தவர்களுக்குக் ஒரே ஊதியமே ரூபாய் 150 கொடுக்கப்படுகிறது .



காலையில் முதலில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வந்ததால் கடைசியில் வந்தவர்களைவிட சற்று அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் . ஆனால் எல்லோருக்குமே ஒரே மாதிரியான சம்பளமே கொடுக்கப்பட்டதால் முதலில் வந்தவர்கள் முணுமுணுத்தார்கள் . தங்களுக்கு அதிகம் தரப்படவேண்டும் எனக் கேட்டார்கள். அதற்கு கடைசியில் வந்த ஒருவருக்கும் முதலில் வந்தவரகளுக்குக் கொடுத்தபடியே கொடுப்பது தம் விருப்பம் எனத் தெரிவித்துவிடுகிறார் .

இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர் என இயேசு தெரிவிக்கிறார் .



கடைசியில் வந்தவருக்கும் குடும்பம் இருக்கிறது . அவருக்கும் செலவுகள் மற்றவரைப்போலவே இருக்கும் . அவர் காலையிலிருந்து வேலைக்காகக் காத்திருந்தார் .அவருக்கு வேலையும் தேவைப்பட்டது . பணமும் தேவைப்பட்டது. ஒருவேளை அந்த ஆள் சோம்பேறியாக இருந்தார் என வைத்துக்கொள்வோம் . அப்பொழுதும் தோட்டத்து உரிமையாளர் முழுச் சம்பளத்தையும் வழங்கியிருப்பாரா . வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம் . ஆம் அந்த ஆளுடைய தேவைதான் அந்த நேரத்தில் சிந்திக்கப்படவேண்டியது . அவருக்கு அவர் குடும்பத்துக்கு பணம் தேவை . எனவே தோட்டத்துத் தொழிலாளி தாராளமாக முழுச் சம்பளத்தையும் கொடுப்பார் . காணாமற்போன மகன் உவமையில் இளைய மகனை பாசமுள்ள தந்தை வரவேற்றது போல கடவுள் தந்தையும் இரக்கப்பெருக்கானவர் . வானமும் பூமியும் கீழ்த்திசையும் மேற்திசையும் எவ்வளவு தொலைவோ அந்த அளவுக்கு கடவுளுடைய மன்னி்க்கும் , ஏற்றுக்கொள்ளும் தாராள உள்ளமும் மனிதருடைய குறுகிய நோக்கும் வேறுபட்டதாகக் கதை தெரிவிக்கிறது . கதை வலியுறுத்திக்கூற வந்த கருத்து கடவுள் தம் விருப்பப்படி நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழியச் செய்வார் .

நாம் நினைப்பது போல கடவுள் தரும் பரிசு நமது வேலை போன்ற நம் செயல்களைப் பொறுத்தது அல்ல . திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை நம்மில் யாரும் கடவுளிடம் காரணம் காட்டி பரிசு பெறமுடியாது . அவர் மன்னவர் . மாபெரும் பரிசை நாம் கேட்காமலும் தருவார் .



முதலில் வந்தவர்கள் முணுமுணுப்பது கால நேரத்தைக் கணக்கிட்டுச் சம்பளம் தரப்படும்போது சரியானதாகத் தெரிகிறது . ஆனால் கடவுளின் பேரிரக்கத்தையும் கடல்போன்ற தாராளமனத்தையும் கணக்கெடுக்கும்போது முணுமுணுப்பது தவறு. மாசில்லாத கடவுள் முன்னர் பாவிகளாகிய மனிதர் நாம் எத்தனை மன்னிப்புக் கேட்டு குற்றத்துக்கு நிவாரணம் செய்தாலும் கடவுளுக்கு எதிராகக் செய்யப்படும் குற்றத்துக்கு மன்னிப்பு உண்டா . உண்டு ஏனெனில் கடவுள் உலகின்மீது கொண்ட அன்பின் காரணத்தாலேயே தம் ஒரே மகனையே சிலுவைச் சாவுக்குக் கையளித்தார் .

கடவுளிடம் நாம் ஒரு மணல் மணிமட்டும் வேண்டும் எனக் கேட்டால் கடற்கரையையே நமக்குத் தருவார் . ஒரு நட்சத்திரம் கேட்டால் எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள் புதிய புதிய நட்சத்திர உலகங்களையே நம் கண்ணுக்கு விருந்தாகத் தருவார் .

மனிதர்கள் நாம் நாம் நம் மனிதச் சிந்தைப்படி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கலாம் . ஆனால் கடவுளின் கணக்கில்லாத தன்மையை நம்முடைய கணக்குப்பார்க்கும் சிந்தனைகளும் சுயநலம் தேடும் போக்கும் புரிந்து கொள்ளவே முடியாது .

நாம் கடவுள் பிறருக்கு அளிக்கும் கோடி நன்மைகளுக்காக நன்றி கூறவேண்டுமே யொழிய முணுமுணுக்கக் கூடாது . காலையில் பணிக்கு முதலில் வந்தவர்களுக்கு வயிற்றெரிச்சல் . காணாமற்போன மகன் உவமையில் மூத்த மகனுக்கு வயிற்றெரிச்சல் . காணாமல் போன ஆட்டைத்தேடிச் செல்பவர் கடவுள். அந்தப் பேரன்பு நமக்கு கொஞ்சமாவது வேண்டும் . கடவுள் கணக்குப் பார்ப்பதை விரும்புவதில்லை என இன்றைய உவமை நமக்குக் கூறுகிறது . கடவுள் நாம் கேட்பது அனைத்தையும் கேளாதனவற்றையும் அமுக்கிக் குலுக்கித் தருவார் . பள்ளிக்கணக்கு அவரிடம் செல்லாது .

அன்பில்லாத முழு நேரம் வேலை செய்தவர்களின் சிந்தனையும் கடவுளின் தாராளமனப்பாங்கும் கதையில் தெளிவாக்கப்படுகின்றன .

நாம் வான்வீட்டைச் சம்பாதிக்க வேண்டும் என்பது கடவுளுக்கு ஒவ்வாத கொள்கை என இன்றைய உவமை கூறுகிறது . கடவுளின் அருள பாய்ந்து வரும் வெள்ளம் . திருத்தூதர் பவுல் கூறுகிறார் – கடவுளின் அருளால் நீங்கள் மீட்கப்படுகிறீர்கள் . நீங்கள் செய்யும் புண்ணிய பலன்களால் அல்ல எனத் தெளிவுறக் கூறுகிறார் . எல்லாம் கடவுளின் கொடையே . நம்முடைய பணியால் நாம் சிறப்படைவதாக யாரும் பெருமை கொள்ளவேண்டாம் என்கிறார் திருத்தூதர் பவுல் . நாம் பிறரையும் சிறப்புக் காரணமாக எடைபோடாது மனிதம் காரணமாக கடவுளின் அன்புக்கு உரியவர் – அவர் அனைவரது மீட்புக்காகவும் தம் மகனை உலகுக்கு அனுப்பினார் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம் .








All the contents on this site are copyrighted ©.