2009-07-27 15:13:12

மனிதத்தின் சரிபாதியை அவமதிப்பது நம்மையே அவமதிப்பதாகும்


ஜூலை27,2009. சிறையில் இருந்த தனது அன்பு மகன் விலாடுமீர் லெனினைப் பார்க்க அவரது அன்னை மரிய அலெக்சான்ட்ரியா நீண்ட நேரம் காத்துக் கொண்டிருப்பது வழக்கமாம். ஒருநாள் அவரிடம் காவல்துறை அதிகாரி, “உன் மூத்த மகன் தூக்குமேடையில் இறந்தான். இன்னொருவனுக்குத் தூக்குமேடை காத்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னார். அதற்கு அத்தாய், “நான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி எப்போதுமே பெருமைப்படுவதுண்டு” என்று கம்பீரமாகப் பதில் அளித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிரம்புரா கிராமத்தில் குர்தீப்சிங் என்பவர் முன்னாள் இராணுவ வீரர். இவரது மகள் கமல்ஜித் கவுர், அதே கிராமப் பகுதியைச் சேர்ந்த பலிகார் சிங் என்பவரைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இந்தத் திருமணம் குர்தீப்சிங்கின் விருப்பத்திற்கு மாறாக நடைபெற்றதால் கோபமடைந்த அவர், மணமகன் பலிகார்சிங்கைக் கொல்வதற்காக அடியாட்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரைத் துப்பாக்கியால் சுட்ட போது மகனைக் காப்பாற்றுவதற்காகத் தாய் குறுக்கே வந்து துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியானாள். மகன் உயிர் தப்பினான். மகனைக் காப்பாற்றத் தன்னுயிரைப் பறிகொடுத்தாள் அந்தப் பாசமிகு தாய்.

இருபதாம் நூற்றாண்டின் புரட்சி சிந்தனையாளரான லெனினின் வீரத்தாய், பலிகார்சிங்கின் பாசமிகு தாய் போன்ற பல வீரப்பெண்கள் அன்றும் இன்றும் சமுதாயத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமுதாயச் சிற்பிகளுக்கு உருக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இந்த அருமையான பெண்ணினம் பாகுபாடுத்தப்படுவதும் ஏமாற்றப்படுவதும் இன்னும் சமுதாயத்தில் மறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

இவ்வாரத் தமிழ் வெளியீடு ஒன்றில் “இளம்பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!” என்ற சம்பவத்தை வாசித்தோம். மதுரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் மதுரையிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிக ஊழியர். கல்லூரி படிப்பை முடித்த இவர், ஒரு வாகன ஓட்டுனர் மீது அன்பு கொண்டார். ஆனால் அவர் திருமணமாகி குழந்தைகளுக்கும் தந்தை என்ற விடயம் அவர்கள் பழகி ஓராண்டு கழித்தே தெரிந்திருக்கின்றது. எல்லாம் மட்டுமீறிப் போன நிலையில் தன்னையும் திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறாள் அந்தப் பெண். அதற்குச் சம்மதிப்பது போல நடித்த அவன், அந்தக் கடைசி நாள் மாலையும் அவளை ஆசைதீர அனுபவித்ததுமின்றி அவனது நண்பர்கள் மூவருக்கும் அவளைத் தாரை வார்த்திருக்கிறான். அவர்கள் மிருகங்களைவிட மோசமாக நடந்ததாக அவள் வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறாள். இறுதியில் மதுரைகல்லூரி பக்கமுள்ள மேம்பாலத்துக்கு மேலேயிருந்து இரயில் தண்டவாளத்தில் தூக்கிப் போட்டுவிட்டு கயவர்கள் சென்றுவிட்டார்கள். இப்போது அப்பெண்ணின் காலும் மற்ற எலும்புகளும் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

இது இப்படியிருக்க, இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களும் பள்ளிச் சிறுமிகளும் எதிர்நோக்கும் பாலியல் பலாத்காரங்கள் ஊரறிந்த உண்மை!. எடுத்துக்காட்டாக, கடந்த புதன்கிழமை, அம்பாறை மத்தியமுகாம் 4ம் காலனிப் பகுதியில் 7ம் வகுப்பு மாணவி மதுனுஸ்கா இனந்தெரியாதோரால் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று கடந்த வெள்ளிக்கிழமை இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரும், இனப்படுகொலை, போர்க்காலக் குற்றங்கள், இனஅழிப்பு மானுடத்திற்கெதிரான குற்றங்கள் ஆகிய கொடுமைகள் இலங்கை, ஜார்ஜியா, காங்கோ போன்ற நாடுகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்று கடந்த வாரத்தில் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில், நியுயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத் தலைமையகத்தில், பெண்கள் தற்போது எதிர்நோக்கும் புதுவிதமான பாகுபாடுகள் குறித்த கூட்டம் ஒன்று கடந்த வாரத்தில் தொடங்கபட்டுள்ளது. பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பது குறித்த சர்வதேச ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென ஐ.நா.குழு ஆரம்பிக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு இவ்வாண்டில் நிறைவுறுவதால் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் ஏழாம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத்தில் ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லாவோஸ், லைபீரியா, டென்மார்க், பூட்டான், கினி பிசாவ், அஜர்பைஜான், துவாலு, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் பெண்கள் குறித்த இவ்வொப்பந்தம் செயல்படுத்தப்படுவது குறித்து 23 வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இக்கூட்டம் பற்றிப் பேசுகிறார் அந்த ஐ.நா.குழுவின் தலைவர் நயேலா முகமத் காப்ர்

தற்போதைய நிதி நெருக்கடியில் பெண்களின் ஊதியம், அவர்களுக்கான வேலைவாய்ப்பு, வயதான பெண்களின் நிலை உட்பட அவர்களுக்கான சமூகநலப் பணிகள் பற்றியும் பெண்கள் வியாபாரம் செய்யப்படுவது, பன்றிக்காய்ச்சல் உட்பட நோய்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்ற விவகாரங்கள் பேசப்படுகின்றன. இச்சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் விரைவில் கையெழுத்திடவும், கையெழுத்திட்டு அதனைச் செயல்படுத்தாமல் இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட அனைத்து நாடுகளும் அதனை செயல்படுத்தவும் இக்கூட்டம் வலியுறுத்தும். இக்கூட்டத்தின் முடிவுகள், 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் அவைக்கு அனுப்பப்படும் என்று விளக்கினார் நயேலா முகமத் காப்ர்

திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், உலகிலுள்ள அனைத்து தாத்தா பாட்டிகளுக்காகச் செபிப்போம், அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இளையோருக்கு கற்றுக் கொடுப்பதில், குறிப்பாக இன்றைய உலகில் இளையோருக்கு கற்றுக் கொடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்று கூறினார். இயேசுவின் தாத்தா பாட்டியாகிய புனிதர்கள் சுவக்கின், அன்னம்மாள் விழா இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி அனைத்து தாத்தா பாட்டிகளுக்காகச் செபிப்போம் என நம் அனைவருக்கும் அழைப்புவிடுத்தா RealAudioMP3 ர். அதேசமயம் அவர்களுக்குச் சிறப்பான ஆசீர் வழங்குவதாகவும் கூறினார் திருத்தந்தை.

அண்மையில் வெளியான ஐ.நா.அறிக்கை ஒன்று, உலகில் பல பெண்கள், தாய்மைப்பேறு மற்றும் வயதான காலத்தில் அதிகத் துன்பங்களை எதிர்நோக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. வறுமை மற்றும் சமத்துவமின்மையால் பெண்களின் வாழ்க்கை, குறிப்பாக கர்ப்பகாலம் மற்றும் வயதான காலத்தில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள், அதாவது ஒரு நிமிடத்துக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் கர்ப்பம், குழந்தை பிறப்பு தொடர்புடைய பிரச்சனைகளால் இறக்கின்றனர். இதில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில் இடம் பெறுகின்றது. அதேசமயம் உலக அளவில் உணவுப் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளிலும் கரீபியன் நாடுகளிலும் அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தியில் 80 விழுக்காடு வரை செய்வது பெண்களே. ஆசியாவில் இது 50 விழுக்காடு. இலத்தீன் அமெரிக்காவில், கோழி வளர்ப்பு, சிறிய பிராணிகளை வளர்த்தல், வேளாண்மை போன்ற சிறு தொழில்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், உலகில் பரவலாக பெண்கள் ஆண்களைவிட குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். இருந்தாலும் பிரேசில் நாட்டில் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் அவர்கள் வயதையொத்த ஆண்களைவிட அதிகமாக ஊதியம் பெறுகின்றனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறுகிறது. ஆயினும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1967ம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி வெளியிட்ட பெண்களுக்கெதிரான பாகுபாடுகள் ஒழிக்கப்படுவது குறித்தத் தீர்மானங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அன்பர்களே, வறுமை, அடக்குமுறைகள் போன்றவைகளால் பெண்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும் வாரே வாவ்! என்று பாராட்டுப் பெறும் கண்மணிகள் அவ்வப்போது தலைதூக்கி பெண்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். 'கராத்தே'யில் சர்வதேச அளவில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழகச் சிறுமி ஷில்பா. இவ்வளவுக்கும் இவள் சுமைதூக்கும் ஒரு கூலித் தொழிலாளியின் மகள்! கோவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புதான் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்த ஐந்து ஆண்டுகளில் இவள் தொட்டிருக்கும் உயரம் அபாரமானது. மாவட்ட, மாநில அளவில் தொடங்கி அறுபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை தட்டி அசத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த முதலாவது சர்வதேச 'கோஜூரியூ' கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் என்று சாதனைப் பட்டியல் சரசரவென நீள்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை சிகரங்களை நோக்கி அவள் ஓடும்போதும் கடந்து வந்த வறுமை பள்ளத்தாக்குகளின் ஆழங்கள் குரூரமானவை!.

மேலும், பெடரிக்கா பெல்லெகிரினி என்ற 20 வயது இத்தாலியப் பெண் இஞ்ஞாயிறன்று 400 மீட்டரை 3 நிமிடங்கள், 59.15 விநாடிகளில் நீந்தி உலக சாதனை படைத்திருக்கிறாள்.

ஒருமுறை நேதாஜி பெர்லினில் இருந்த சமயம் அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக ஒரு செய்தி நிறுவனம் பொய்ச் செய்தி ஒன்றைப் பரப்பியது. அதனை வாசித்த நேதாஜி கண்கலங்கி அழுதாராம். அஞ்சா நெஞ்சராக அந்நியரை மிரட்டிய நேதாஜியா இப்படி? என்று அருகில் இருந்தவர்கள் கேட்ட போது அவர் சொன்னாராம்- நான் மரணத்தைக் கண்டோ, மரண செய்தியைப் பார்த்தோ பயப்படவில்லை. ஆனால் எனது வயது முதிர்ந்த தாய் இந்தச் செய்தியைக் கேட்டுக் கலங்கிப் போவார்கள். அவர்களுக்கு நான் உயிரோடு இருக்கின்ற செய்தியைச் சொல்ல முடியவில்லையே என்றுதான் அழுகிறேன் என்று.





தாயாக சகோதரியாக மகளாக மனைவியாக பாட்டியாக தியாகங்கள் நிறைந்த பல பரிணாமங்களை எடுக்கும் பெண்களின் மாண்பைப் போற்றி மதிப்போம். பன்னாட்டு அவை வலியுறுத்தும் சமத்துவத்தை அவர்களுக்கு வழங்குவோம். மனிதத்தின் சரிபாதியை அவமதிப்பது நம்மையே அவமதிப்பதாகும்.

 








All the contents on this site are copyrighted ©.