2009-07-27 14:58:43

தாத்தா பாட்டிகளுக்காகச் செபிக்க திருத்தந்தை வேண்டுகோள்


ஜூலை27,2009. மேலும், உலகிலுள்ள அனைத்து தாத்தா பாட்டிகளுக்காக நாம் செபிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று கூறினார்.

ஜூலை 26ம் தேதி இஞ்ஞாயிறன்று அன்னைமரியாவின் பெற்றோரும் இயேசுவின் தாத்தா பாட்டியுமாகிய புனிதர்கள் அன்னம்மாள், சுவக்கின் விழா திருச்சபையில் சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கூறிய திருத்தந்தை, அனைத்து தாத்தா பாட்டிகளுக்குத் தாம் சிறப்பாக ஆசீர் வழங்குவதாகவும் அறிவித்தார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த அவர், தாத்தா பாட்டிகள் வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளுக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இளையோருக்கு கற்றுக் கொடுப்பதில், குறிப்பாக இன்றைய உலகில் இளையோருக்கு கற்றுக் கொடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்றும் கூறினார்.

தாத்தா பாட்டிகளின் கல்விப்பணி எப்பொழுதும் மிகவும் முக்கியமானது, மேலும், பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் வளரும் போது போதுமான நேரம் அவர்களுடன் இருக்கமுடியாத போது தாத்தா பாட்டிகளின் கல்விப்பணி மிக முக்கியமானதாக மாறுகின்றது என்றும் கூறினார் அவர்.

உலகிலுள்ள அனைத்து தாத்தா பாட்டிகளை புனிதர்கள் அன்னம்மாள், சுவக்கினின் பாதுகாவலில் அர்ப்பணிப்பதாக உரைத்தத் திருத்தந்தை, தனது தாய் அன்னம்மாளிடம் புனித நூல்களைக் கற்றுக் கொண்ட புனித கன்னிமரி, தாத்தா பாட்டிகள் இறைவார்த்தையின் ஊற்றில் தங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைப்பதற்கு உதவுவாராக என்றும் கூறினார்.

திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்டு அவரது ஆசீர் பெறச் சென்றிருந்த பல மொழி மக்களை முக்கியமான ஐரோப்பிய மொழிகளில் வாழ்த்திய போது இந்த கோடை விடுமுறை காலம் பயனுள்ள விதத்தில் அமையவும் வாழ்த்தினார்.

RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.