2009-07-25 14:31:31

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கூற்று, “பாதுகாப்பதற்கான உரிமை” பற்றிய ஐ.நா. உரையாடலுக்கான வரைவுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது


ஜூலை25,2009. ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான முதன்மையான கடமையைக் கொண்டுள்ளது என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கூற்று, “பாதுகாப்பதற்கான உரிமை” பற்றிய ஐ.நா. உரையாடலுக்கான வரைவுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் செலஸ்தீனோ மிலியோரே கூறினார்.

இந்த ஐ.நா. கலந்துரையாடல் பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, இனப்படுகொலை, போர்க்காலக் குற்றங்கள், இனஅழிப்பு மானுடத்திற்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கு சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இந்தக் கொடுமைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்றார்.

இதற்கு ஜார்ஜியா, காங்கோ, இலங்கை போன்ற நாடுகளின் சூழல்களைச் சுட்டிக் காட்டிய அவர், நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு கொண்டிருக்கின்ற சர்வதேச விதிமுறைகளை மதிக்கத் தவறுவதே இதற்குக் காரணம் என்றும் கூறினார்.

கடுமையான மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானப் பேரிடர்களின் விளைவுகள் போன்றவற்றினின்று தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நாடும் தலையாயக் கடமையைக் கொண்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கூறியது ஐ.நா.உரையாடலுக்கான வரைவுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.