2009-07-22 13:59:48

காங்கோவில் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட காரித்தாஸ் அழைப்பு


ஜூலை22,2009 காங்கோ ஜனநாயகக் குடியரசில், சர்வதேச காரித்தாஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் ப்ரெஞ்ச் பிரிவின் அலுவலகர் ஒருவர் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டது பற்றிக் கவலை தெரிவித்த அதேவேளை, இந்த ஆப்ரிக்க நாட்டில் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.

27 வயதான ரிக்கி அகுசா சுகாகா என்ற காரித்தாஸ் நிறுவன அலுவலகர் இம்மாதம் 15ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அறிக்கை வெளியிட்ட அந்நிறுவனப் பொதுச் செயலர் லெஸ்லி-ஆன் நைட், ரிக்கி பிறரின் நல்வாழ்வுக்காக தைரியமாக உழைத்தவர் என்று பாராட்டியுள்ளார்.

அதேசமயம் காங்கோவில் இடம் பெறும் வன்முறையும் கொலைகளும் நிறுத்தப்பட்டு நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு போரிடும் தரப்புகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார் நைட்.

காங்கோ இராணுவமும் புரட்சிப் படையும் நாட்டின் கிவு மாகாணத்தில் தொடர்ந்து நடத்திவரும் மோதல்களில் ஏற்கனவே 10 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

மேலும், ஆயுதம் தாங்கிய குழுக்கள், அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் சூறையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.