2009-07-21 12:37:40

தாலந்து உவமை தூய மத்தேயு 25 . 14 – 30 .


தாலந்து என்ற வார்த்தை இந்தக் கதையிலிருந்து உருவானதே . தாலந்து என்பதற்கு இந்தியப்பணம் 50,000 ரூபாய் என்று பொருள் . ஆனால் அதற்கு வேறொரு முக்கியமான அர்த்தம் திறமை என்பதாகும் . சில தனிப்பட்ட கோட்பாடுகள் மனிதர்கள் எல்லோரும் சமம் என்றோ சமமாக கருதப்படவேண்டும் என்னும் கொள்கையோ தவறு எனச் சான்றோர் கூறுவர் . பிறப்பில் ஒன்றாகப் பிறக்கும் குழந்தைகள் சிறப்பு அடிப்படையில் செய்தொழில் அடிப்படையில் ஒன்றாகமாட்டா என்று வள்ளுவப்பெருமகனார் கூறுவர் . இயேசுவும் மனிதர்கள் திறமைகள் அடிப்படையில் வேறுபட்டவர்கள் என்பதை அறிந்து அதையே கற்பித்து வந்தார் . திருத்தூதர் பவுல் அடிகளாரும் வரங்கள் பல விதம் என விரிவாக விளக்கிக்கூறுவார் . வாழ்க்கையில் நாமும் இதைக் கண்கூடாகக் காண்கிறோம் . தூய பேதுரு பசிலிக்காவுக்கு கட்டடக் கலைஞர் மைக்கிள் ஆஞ்சலோ வரை படம் வரைந்தார் . அதற்குப்பின்னர் பல கலைஞர்கள் அதற்கு செயல்திட்டமும் மெருகும் சேர்த்தனர் . பல திருத்தந்தையர்கள் , பல கலைஞர்கள் தூய பேதுரு பசிலிக்காவை 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டினார்கள் . ஆனால் அதை நிர்மாணித்தவர்கள் அனைவருமே வெவ்வேறு விதத்தில் திறமைசாலிகள் . அங்கிருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் கட்டடத்திறனும் பல்வேறு கலைஞர்களின் திறனைக் காலமெல்லாம் ரசிக்குமாறு காட்டி நிற்கின்றன . அதைக் கட்டியவர்கள் எல்லோரும் திறமைசாலிகளே .



நாம் அனைவருமே எத்தகு திறமையைக் கொண்டிருந்தாலும் கடவுளுடைய பணியாளர்களே . நாம் அனைவருமே ஒப்பந்தப் பணியாளர்கள் . மிகவும் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களை நினைத்து நாம் பொறாமைப்படத் தேவையில்லை. பதவி உயர உயர பொறுப்புக்களும் அதிகமாகின்றன . ஒரே கடவுளை வணங்கத் தெரிந்து கொண்ட யூதர்கள் கடவுளுக்குப் பணிந்து அவர்காட்டிய வழியில் வாழ மிகவும் கடமைப்பட்டவர்கள் . இந்தக் கதை அவர்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்றாலும் நாமும் இதனால் பயனடைய வேண்டும் .

தூய பேதுரு பசிலிக்காவுக்கு வரைபடம் வரைந்த மைக்கிள் ஆஞ்சலோ மட்டும்தான் முக்கியமானவர் எனக்கூறுவது தவறு . அங்கு கல்லையும் மண்ணையும் சுமந்தவரும் முக்கியமானவரே. எல்லோரும் கடவுளின் பணியாளர்கள் . அவ்வாறு நாம் சமம் எனக்கூறுவது தனிப்பட்ட கோட்பாடு காரணமாக அல்ல . வாய்ப்புக்களும் பலருக்கும் பலவிதமாகத் தரப்படுகின்றன .

கடவுள் நம்மை மறந்தது போலத் தெரியலாம் . ஆனால் அவர் யாரையும் மறப்பதில்லை . நம்முடைய திறமைகளை வெளிக்காட்ட அவர் வாய்ப்பளிக்கிறார் . நாம் நமது வாழ்க்கை என்ற வயலில் பல்வேறு வகையான பயிர்களை வளர்ப்பதற்கு வாய்ப்புத் தரப்படுகின்றோம் . நாம் இதனைச் செய்து முடிக்கக் கால அவகாசமும் தரப்படுகின்றோம் .

ஆனால் முடிவில் ஒருநாள் நாம் ஆண்டவருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் . நமக்கு வாழ்வும் வளமும் அளித்த ஆண்டவர் நம்மிடம் கணக்குக் கேட்பது முறையே . இங்கு பணத்தைவிட மிக முக்கியமானது இருக்கிறது . பணத்தை வீணாக்குவதைவிட வேறு முக்கியமானவை இருக்கின்றன . நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நாம் செபிக்கின்றோமா. பிறரோடு நட்போடு பழகுகின்றோமா . உறவுகளை வளர்க்கின்றோமா . நீதீயோடு நடக்கின்றோமா நீதிக்காக போராடுகின்றோமா . கடவுள் நம்மிடம் நல்ல மதிப்பீடுகளின் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார் . தாலந்து அல்லது திறமைகள் என்பது பொருட்காட்சிசாலைப் பண்டங்கள் அல்ல . அல்லது தற்பெருமையோடு தருக்கித் திரிவதற்காகத் தரப்பட்டவையும் அல்ல . நிலத்தையும் பருவத்தையும் போன்றது நம்முடைய சூழ்நிலைகள் . நாம் விதைப்பதைப் போன்று திறமைகளைப் பயன்படுத்தவேண்டும் . வெந்ததைத் தின்று வெறுமனே வாழ்ந்து விதி வரும்போது சாவோம் என்றிருப்பது அறிவுடைமையன்று .புதுப்புது விளைச்சலுக்கு வித்திடவேண்டும். ஜூலைத்திங்கள் 21 ஆம் நாள் 1969 லேயே மனிதன் நிலவில் கால்பதித்து வந்துள்ளான் . அதன்பிறகு பலமுறை நிலவில் தடம் பதித்து வந்துள்ளான் . கடல்கடந்து அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார் . காட்டை நாடாக்கி நகராக்கிய பெருமை மனிதரைச் சாருமல்லவா .



எனவே சமத்துவம் உள்ளது . திறமைகளில் அல்ல . வாய்ப்புக்களில் சமத்துவம் உள்ளது . ஒவ்வொருவர் திறமைக்கும் ஏற்றவாறு பொறுப்புக்களிலும் சமத்துவம் உண்டு . கடவுள் காட்டும் அன்பிலும் எல்லோரும் சமமே . ஐந்து தாலந்தைப் பெற்றவரும் இரண்டு தாலந்தைப் பெற்றவரும் பாராட்டப்பெற்றார்கள் . எல்லோருக்கும் இறைவனின் அரசில் இடமுண்டு . ஆனால் எல்லோருமே கடவுளின் அரசில் பணியாளர்களே . எல்லோரிடமும் பொறுப்பும் தரப்பட்டுள்ளது .



கதையில் வரும ஒரு தாலந்தைப் பெற்றவர்தான் கதையின் கதாநாயகர் என்பதைச் சொல்லத் தேவையில்லை . வாழ்க்கையில் ஒரு தாலந்தையும் இரண்டு தாலந்தையும் பெற்றவர்களைத்தான் அதிகம் காண்கிறோம் . கம்பரும் வள்ளுவரும் சேக்ஸ்பியரும் தாமஸ் ஆல்வா எடிசனும் மார்க்கோனியும் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகிறார்கள் .

 

ஒரு தாலந்தைப் பெற்றவருக்கு சோதனைகள் அதிகம் . எனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு திறமையைக் கொண்டு நான் எதைச் சாதிக்கமுடியும் என எண்ணலாம் . எனக்கு ஒரு தாலந்துதானே இருக்கிறது என்றெண்ணி வருத்தமும் படலாம். மற்றவர்களுடைய திறமைகளைப் பார்த்து பொறாமையும் படலாம் . கதையில் தலைவரையே அவன் கோபமாகக் கடிந்து கொள்கிறான் . ஐயா நீர் கடின உள்ளத்தினர் எனக் கூறுகிறான். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர் . கடவுளையும் மனிதர்களையும் கடிந்து கொள்பவர்கள் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தாத மனித முயற்சியில்லாதவர்கள் .



ஒரு தாலந்தைப் பெற்றவனின் தோல்விக்குக் காரணம் அவனது பயம் . உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் எனக்கூறுவதைக் கேட்கிறோம் . சவால்களைச் சந்திக்க அஞ்சினான் . அவனுடைய தலைவர் சரியாக சோம்பேறியே , பொல்லாத பணியாளனே எனப் பொறுத்தமாகக் கூறுகிறார் . சவால்களைச் சந்தித்துத் தோல்வியுற்றால் பரவாயில்லை. எதையுமே சந்திக்காமல் வெறுமனே இருந்து வாழ்வை இழப்பது மனித மாண்பல்ல . ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சிகாலத்தில் பலர் தீமைகளைக் கண்டும் அவனைக் கண்டிக்கத் தவறினார்கள் . அவனது செயல்படாத்தன்மையால் அவன் பெரும் குற்றவாளியாகின்றான் . தீமைக்குத் துணை போகின்றான் . அவனைப்போல செயல்படாதிருப்பதாலேயே உலகில் இன்று தீமைகள் மலிந்து கிடக்கின்றன .40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் ஆம்ஸ்ட்ராங்க் , ஆல்டிரின் , காலின்ஸ் ஆகிய அமெரிக்க விண்வெளிவீரர்கள் நிலவில் கால் பதித்தனர் . அவர்கள் அங்கு செல்ல எத்தனை ஆயிரம் பேர் பணி செய்து உதவினர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் . இசைக் கருவியில் ஒரு முக்கியமான சுரம் அந்த ஒரு தாலந்துக்காரன் . அவன் செயல்படாதபோது இசை மழை பொழிவதெப்படி . அவன் முயற்சி செய்திருக்கலாம் , கடவுள் அருளுக்கு மன்றாடியிருக்கலாம் , பிறரோடு கலந்து ஆலோசித்திருக்கலாம் . உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் முக்கியமாவது போல இறையாட்சியில் நாம் அனைவருமே முக்கியமானவர்கள் .

 








All the contents on this site are copyrighted ©.